ஈழத்திலோர் காதலி
ஈவிரக்கமற்ற
ஈய ரவைக் குண்டுகளின் வேள்வித் தீயில்
அப்பாவும் அம்மாவும்.
வறண்டு போன சுரப்பிகளில்
காமத் தினவில்லை
அமில மழை
அடியுரமாய் நஞ்சு
எப்படிப் பூக்கும் பருவப்பூ
இருந்தாலும் எழுந்த காதலால்
ஆதரவாய்க் கரம் பிடிக்க
கடை விழிகள்
காதலனைத் தேடிச் சுற்றிய
ஓர் பகற் பொழுதில்,
கற்பிக்கப்பட்ட யாவும் களவு போனது
கதறலின் இசைப் பின்னனியில்
குற்றமிழைத்த உணர்வோடு
கூற்றம் தின்ற மிச்சமாய்
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
கல்லறைகள் தோறும்
கடந்த காலத்துக் காதலனை
அவன் புலியில்லை
பயம் வேண்டாம்
கண்டால் சொல்லுங்கள்