கைநாட்டுக் கவிதைகள் 6

கணபதி டாக்டரு?
கசாயம் சூரம்
தூதுவளை நண்டு ரசம்
இதுக்கும் கட்டுப்படாத
வியாதிக்கு
கல்லூரு கணபதி டாக்டரை
போய் பார்ப்பது எங்க
ஊருசனத்துக்கு வாடிக்கை....
ஒரு ஊசி போட்டாலே
ஓடிப்போகும் சீக்கு
கொடுப்பதை வாங்கிப்பாரு
கூலியை
நெல்லு காய்கறியாகவும்
நெறயப்பேர் கொடுப்பதுண்டு
மகப்பேறுன்னா - அவர்
மனைவியும் சேர்ந்து பாக்கும்
பாய்சன் கேசுன்னா
குடும்பத்தோடு களமிறங்கி
கொண்டாந்துருவாரு உசிர
கவர்மெண்டு
ஆஸ்பத்திரின்னாலே - அது
எமனோட
ஏசண்ட்டப் போய்
அப்படீங்கிற கருத்து
பட்டி தொட்டியெங்கும்
பரவிக் கெடந்ததால
கணபதி டாக்டருக்கோ
கட்டுக்கடங்கா கூட்டம் வரும்!
ஒரு தடவை
நாடி பார்க்க
கை புடிச்ச போது
டாக்டருக்கு வலைவிரிக்க
பர்மாக்கார பொம்பள
பம்மாத்து பண்ணினாளாம்!
அறிவைப் பெருக்கிற
வாத்தியானும்
ஆரோக்கியம் காக்குற
மருத்துவனும்
தங்கிட்ட வருவோரை
புள்ளையா நெனக்கணுமே தவிர
பொண்டாளா
நெனக்கப்புடாதுன்னு....
கண்ணியம்
காத்தவராம் கணபதி டாக்டரு!
இப்படி
வைத்திய மொறையிலும்
வாழ்க்கை மொறையிலும்
தடம் புரளாம
நடை போட்ட டாக்டர....
போனவாரம்
போலீஸ் வந்து
போலி டாக்டருன்னு
புடிச்சுகிட்டு போயிருச்சாம்
ஆர்.எம்.பி. படிச்சுபுட்டு
ஊசிமருந்து போடலாமா
'டாக்டர் வேல' பார்ப்பதான்னு
எவனோ எடுபட்டவன்
எழுதிப் போட்ட
பெட்டிசனால
கணபதி கிளினிக்கை
பூட்டிருச்சாம் போலீசு.....
எங்க ஊருச்சனத்துக்கு
கொள்ளாத வருத்தம்
எஞ்சீனியர் கட்டுன
எத்தனையோ கட்டிடங்கள்
இடிஞ்சு தான் விழுகலையா
எத்தனையோ பேர் சாகலையா
படிப்பறிவு இல்லாத
பாமரக் கொத்தனாரு
மலைக்கோட்டை கட்டலையா?
மதுரக்கோயில் எழுப்பலையா?
படிக்காத காமராசர்
பக்குவமா நல்ல ஆட்சி
பார்புகழ நடத்தலையா?
முச்சந்தி தோறும்
முனகல்கள் இதுபோல....
எந்த சர்ட்டிபிகேட்
வாங்கணுமோ
எங்களுக்கு தெரியாது
மக்கள் தந்த சர்ட்டிபிகேட்டு
மகராசன் கணபதி டாக்டரு
கண்ணியவான்
கைராசிக்காரரு!
சாமீன்ல வரும் வரைக்கும்
காத்துக்கிடக்கு ஊருசனம்.....

எழுதியவர் : (18-Jan-14, 1:12 pm)
பார்வை : 79

மேலே