கைநாட்டுக் கவிதைகள் 7
குலசாமி!
உன் மீது
நான் வச்ச ஆசை
'பருக்களா'
என் மூஞ்சியில
முளைச்சு
நின்னது பாத்து,
வீக்கோ டெர்மரிக்
வாங்கித் தந்தாய்
'விரல்களாலே
கோதி விடு
அழகாய்
இருக்கும்'ன்னாய்
சீப்புக்கு
தடை போட்டாய்
'ரசினியின் சாயல்'ன்னு
ரகசியம் வேறு
சொன்னாய்
கோகுல் சாண்டல்
போடுங்கள்
ரம்மியம்'னு சொன்னாய்....
தலையணை
உறைபோல
டைட் பிட்டிங்க்ஸ்
எதுக்கு?
விசாலமான அளவில்
ஆடை அணியச்
சொன்னாய்....
அதுமுதல்
என் அப்பா
சட்டைகளையே
அணியலானேன்.
அபாரம் என்றாய்....
திராவிட
நிறம் நீங்கள்
டார்க் கலர்
பொருந்தாது.
வெள்ளை
நல்லா இருக்கும் - என்றாய்
நான் கருப்பு
என்பதைக்கூட
கண்ணியமாய்ச்
சொன்னாய்....
கோயிலை நெருங்குகிற
பாற்குடம்போல
வேகம் எதுக்கு?
மெதுவாய்
நெஞ்சு நிமிர்த்தி
நடக்கப் பழகுங்கள்
அதுவே ஆணுக்கு அழகு - என்றாய்....
இன்னும்... இன்னுமாய்....
என் பிழைகளுக்குத்
திருத்தங்கள் செய்தாய்....
காட்டாறாய் கெடந்த
என் சிந்தனைகளுக்கு
அணை கட்டி
பாசனப் பரப்பிற்கு
பக்குவமாய்
வாய்க்கால்கள்
வகுத்தாய்
சிதறிக் கெடந்த
என்னை
சீர்படுத்தி,
அடுக்கி ஒடுக்கி
இலக்கணச் சுத்தமாய்
இயங்க வைத்தாய்.....
இப்போதும்.....
என் மேஜையில்
வீக்கோ டெர்மரிக்,
கோகுல் சாண்டல்,
சீப்பு இல்லாத கண்ணாடி,
விதவைகளின் சீருடையாய்
என் வேஷ்டி, சட்டைகள்
இவற்றோடு
சுவற்றில் அமர்ந்து
என்னை சரிபார்த்துக்
கொண்டிருக்கும்
உன் மாலை போட்ட
போட்டோவும்!