சானு என்றொரு புலியின் குழந்தை
துயர இடுக்குகளிடையே ஊறிக்கசியும்
நிராதரவற்ற மழலையின் குறியீடாய்
கதிரைக்குள் புதைந்து மாலையை பார்க்கிறாள் சானு.
விடுதலையின் கிழக்குகளில்
உதயமாகியிருந்த தந்தையின் முகத்தினை
மேற்குகளுக்கு கையசைத்து தந்து விடச் சொல்லும்
அவள் கண்களில் பனிக்கும்
கண்ணீரின் வாதை
துயர வெளியின் ஒழுங்கைகளில்
பூவரசம் மரமென வேரூன்றி நிற்கிறது.
துவக்குகள் வாழ்வெழுதிய தலைவிதிகளோடு
பரிதவிப்பின் சிரிப்பு வரிசையில்
அனுதாபத்தின் லாபங்களை வேர் பிடுங்கி எறிய
முட்கம்பிகள் வரியப்படுகின்றது
இவள் விடியல்களில்
நிகழ்கால வாசல் எங்கும்
தந்தையற்றவள் எனச் சொல்லி
அநாதை எனும் தலைப்போடு
உலவித்திரியும் மனத்தில்
கோழைகளென தலைப்பு வைத்திருக்கக்கூடுமெனக்கு
மண்ணுக்காய் மடிந்த புனிதனின் பிள்ளையவள்.