தேவதைகளின் தடாகத்தில் நீந்தும் மீன்கள்

சாளரத்தின் திரைச்சீலைகளை
மௌனங்களின் தென்றல் தீண்டிச்செல்ல
உடை பட்டு ஓடும் காதலின் இசையை
அணைகட்டி வைக்கிறது உன் காற்சலங்கை
விண் மீன்கள் குத்திய வானம்
மேகத்தின் மேலே நகர
மூக்குத்தி அணிந்த படி அலைகிறது
உன் நிலா முகம்
ஜீவித பெரு வெளியில்
செட்டைகள் கழற்றும் பாம்பென
ஊர்ந்து செல்லும் உன் விழிகளின் நளினங்கள்
இதயத்தின் சிசுவை
பல முறை தீண்டிச்செல்கிறது
காதலின் ரேகைகள் உதடுகளில் புலம் பெயர
முத்த நிவாரணங்கள் கேட்கிறது யாருமற்ற
அகதியின் கவிதை.
காதலின் இசை மீட்டுமென் தனிமைகளின் மர்மம்
ஏணைகளற்று
பச்சிளம் குழந்தையென
உன் மவுனங்களில் கதறுகிறது
சிருஷ்டியின் பூரண அழகால்
புறக்கணித்த ஆயிரம் கவிதைகளின் புதுச் சொற்கள்
வெந்தணலில் துடிதுடித்து மாய்கிறது. .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (20-Jan-14, 2:06 pm)
பார்வை : 95

மேலே