இருட்டில் உள்ளதடா உலகம்
தாயின் கருவறையோ சுக இருட்டு
தரையில் விழுந்தேன்
தரணி எங்கும் அக இருட்டு
வெளியே விஞ்ஞான வெளிச்சம்
உள்ளே அஞ்ஞான இருள்
புத்தன் ஏசு காந்தி கொள்கைகள்
பூமியில் மீண்டும் புதைக்கப்பட்டன
சத்திய சோதனை செய்ய – இனி
சத்தியமாய் காந்தி வரமாட்டார்
புத்தன் ஏசு கூட - இனி
புதிய போதனை தரமாட்டார்
அன்பு கெட்டதால் அவனியெங்கும் ஓர் இருட்டு
பண்பு கெட்டதால் பவனிவரும் ஓர் இருட்டு
குறுகிய எண்ணத்தால் பெறுகியதோர் இருட்டு
இறுகிய இதயத்தால் இணைந்ததோர் இருட்டு
வண்ணத்திரை சின்னத்திரை இரண்டும்
எண்ணத்திரையில் விதைத்தோர் இருட்டு
புதுவித வாதம் ஓன்று பயங்கரவாதம் என்று
பூமியை கொன்று பூரிக்கிறது இன்று
மனிதா
உலகெங்கும் உள்ளது இருட்டு பார்வை
உனக்கேன் இன்னும் ஜாதிமத போர்வை
இப்படி போர்த்தி போர்த்தியே
இன்று பொசுங்கிப் போனாய்
வையகம் வழி மாறியதால்
வாழ்வில் இருள் ஏறியது
வெளிச்சத்தை வெளியேற்றிவிட்டு
வேதனையை விதைத்தது யார்
வினா எழுந்தபோது
விடை வெளியில் இல்லை - நம்
உள்ளே உள்ளது
மனம் அன்பு கொண்டால் அண்டம் துலங்கும்
தினம் பண்பு கொண்டால் பார் விளங்கும்