தாய்க்குத் தாலாட்டு

வாய்திறந்து வார்த்தை
வாராது போனாலும்!
தாயே உன் கண்ணீர்
தவிப்புகள் சொல்லுதே!
தாலாட்டு பாடுகின்றேன்
தாயே நீ கண்ணுறங்க!!
நான்,
வாய்திறந்து வார்த்தை - பேச
தெரியாத போதும்,
ஓயாமல் அழுதுந்தன்
உறக்கத்தை குறைத்துள்ளேன்!
நான்,
அழுகின்ற காரணத்தை
அறிந்தோர் யாருமில்லை
அன்னையே நீ முதலில்
அறிவதுதான் அற்புதமே!!
அமுதுண்ண அழுதேனா?
அதிர்ச்சியால் அழுதேனா?
பாக்கியாய் விட்டிருந்த
தூக்கத்திற்காய் அழுதேனா?
நோவுடன் அழுதேனா?
நோய் வந்து அழுதேனா?
அன்னையே நீ
அறிவதுதான் அற்புதமே!!
தெருவிலே குரைக்கின்ற நாய்,
நீருக்காய் சண்டையிடும் பெண்கள்,
ஊதாரித் தனமாய்
ஊர்வம்பை பேசித் திரியும்
உருப்படா உயிரிகள்!
சாதாரணப் பேச்சைக்கூட
சத்தமாய் பேசிச் செல்லும்
சண்டியர்கள்!
என நீளும் பட்டியலாய்
எத்தனைதான் பகைவர்கள்!
என் தாயே உனக்கு
நான் தூங்கும் வேளையிலே!
அத்தனையும் என் காதில்
அலையாக வந்திடாமல்
அமைதியாய் நான் தூங்க
ஆர்ப்பாட்டம் செய்தவளும்
நீயே என் தாயே!
இன்றோ-
ஆனந்தக் கண்ணீராய் அழுகின்றாயா?
வயோதிக வலியினால் அழுகின்றாயா?
தாழ்வு மனப்பான்மையினால் அழுகின்றாயா?
என் ஏழ்மை நிலை கண்டு நீ அழுகின்றாயா?
அந்தோ என் பரிதாபம்!
இன்றுந்தன் கண்களிலே
வழிந்தோடும் கண்ணீரின்
காரணத்தை அறியாத
பாவியாக நானே!
மன்னித்திடு தாயே!
தரமான தாலாட்டு
தெரியாது எனக்கு!
இருந்தாலும் பாடுகின்றேன்
தாயே நீ கண்ணுறங்க!!!