தலைப்புச் செய்தி

உழைத்து வாழ்வது ஒன்றையே
பழகிப் போன எனக்கு
கடன் வாங்கவே கூசுகிறது
கடமையை எண்ணி
கண்ணீர் விடுகிறேன்!
காசுக்காக நான் படும்
பாட்டையெண்ணி வேதனையில்
வெம்புகின்றேன்!
தீயில் கருகும் பயிர் போலே!

கைபிடித்த கணவன் நீ
கட்டிலில் மல்லாந்து
படுத்துக் கொண்டே
பத்திரிகைப் படிக்கிறாய்
"வறுமையின் கொடுமையால்
குடும்பத்துடன் தற்கொலை"
உன் மனைவி வாழ்விற்கும்
சாவிற்குமிடையில் போராடுவது
தெரிந்திருந்தும் எனக்கென்ன விதியென்று

அரைவயிற்று உணவும்
எப்படி வருகிறதென
யோசிக்காத உன் மூளை
அரசியல் பேசுது
நிதி அமைச்சகத்தையும்
விட்டுவைக்காமல்!
வீர வசனம் பேசுகிறாய்
அரசியல் சாசனமே
சரியில்லையென உன்
அரியாசனம் ஆட்டம்
காண்பது தெரியாமலே!

அரசியலும் மாறும்
ஆட்சியும் மாறும்
கூடவே என் நிலமையும்
சேர்ந்து தான்!
வெட்டிப் பேச்சு
வேலைக்காகாது
உழைப்பொன்று தான்
உணவுக்கு வழிவகுக்கும்
வேலைக்குப் போயிட்டு வருகிறேன்
என்றேன் நான்

மல்லாந்து படுத்துக் கொண்டே
சரியென்கிறாய் நீ
மடியில் இன்றைய
செய்தித் தாளுடன்
தலைப்புச் செய்தி!
"வாழ வழி தெரியாததால்
இரண்டு குழந்தைகளுடன்
தாய் தற்கொலை".............?

.......................சஹானா தாஸ்!

எழுதியவர் : சஹானா தாஸ் (28-Jan-14, 9:43 am)
Tanglish : THALAIPPUCH seithi
பார்வை : 180

மேலே