கல்லணைக்கோர் பயணம்19

கல்லணைக்கோர் பயணம்..19
(இடையாற்றுமங்கலதிலிருந்து.. )

சாலையின் இருமருங்கிலும்
மரங்கள் சாமரங்கள்வீச
பயண களைப்பில்
ஊரின் ஒதுக்குப்புறமாய்
தனிமையோடும் இறைமையோடும்
பேசிமகிழும் அழகியவீட்டின்
திண்ணையில் அமர்ந்தோம்
அனுமதி பெறாமல்,
புதிதாய் வந்தவர்களை
புரியாத புதிருடன்
ஊரறிய வரவேற்றது
பாசக்கார நாய்
உச்சகட்ட ஒலியுடன்..
மிரட்சியுடன் நாங்கள்
பணிவையும், அடக்கத்தையும்
மரியாதையையும் மாறிமாறி
வழங்கினோம் பயத்தோடு..

முதலாளிக்கு விசுவாசமானவனா(நா)ய்
சம்பளமில்லா தொழிலாளியானவனாய்
இரவும் பகலும் கண்விழித்தும்
பணிசுமை அறியாதவனாய்
ஒருநாள் பிரிந்தாலும்
உறவின் பெருமையறிந்தவனாய்
பாசமழை பொழிபவனாய்
பின்தொடரும் நிழலானவனாய்
தனியாக பிரச்சனைகளை
தைரியமாய் சந்திபவனா(நா)ய்
பல்வேறு அவதாரங்கள்
அவனுக்குள் அன்றாடம்..

மின்சாரமில்லாத வீட்டின்
அழைப்பு மணியானான்
குடிசையின் காவலன்,
சப்தம் கேட்டு
அன்பால் அதட்டினர்
அன்புக்கு அடிமையானது
அகிம்சையின் மறுவடிவமாய்
அக்கணமே மறுபேச்சின்றி
வளைந்த வாலை
மேலும்மேலும் வளைத்து..
வருகைதந்த வழிபோக்கர்களுக்கு
வயிறார தந்தனர்
பானைத் தண்ணீர்
மணலின் குளிர்ச்சியும்
பானையின் பக்குவமும்
தண்ணீரை தேவாமிர்தமாக்கியது
கூச்சமின்றி குடித்தோம்
கேட்டுக் கேட்டு
வயிறும் பானையகியது..

புளியமர நிழல்
தாலாட்டு பாட
மனதார விசாரித்தனர்
வாசல் விருந்தாளிகளின்
நலத்தைப் பற்றியும்
பயணத்தைப் பற்றியும்
கள்ளமில்லா மனதுடனும்
கிராமத்து பாசத்துடனும்.
பேச்சை தொடர்கையில்
கொட்டாவி கூப்பிட்டது
திண்ணையின் மடியில்
தலைவைத்து தூங்க
புளியமரத்தின் கரங்களும்
சாமரம் வீசியது
தென்றலோடு சுகமாய்
சிரித்துசிரித்து பேசிக்கொண்டே..
மெல்லமெல்ல நுழைந்தது
கண்களும் கனவுதேசத்தில்..

(பயணிப்போம்..19)

எழுதியவர் : ஆரோக்யா (30-Jan-14, 4:35 pm)
பார்வை : 58

மேலே