கல்லணைக்கோர் பயணம்24
கல்லணைக்கோர் பயணம்..24
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )
ஊமத்தை செடிகள்
அழகாய் பூத்திருந்தன
குழல் குழலாய்
வெண்மை பூக்களுடன்
உருண்டையான காய்கள்
முள்ளுடை அணிந்திருந்தன
காய்களை கவனமாய்
பறித்து வீசினோம்
வான்நோக்கி வேகமாய்
சென்ற வேகத்தில்
கோபமாய் திரும்பியது
எங்களை நோக்கி
புறங்கையை நீட்டினோம்
கையில் பட்டு
கீழே விழுந்தது
பட்ட வேகத்தில்
கைகளை சுழற்றினோம்
சிலமைல் வேகத்தில்..
ஊமத்தை காய்
பட்ட இடத்தில்
இரத்தம் படர்ந்தது
மெல்லிய வியர்வைபோல்
ஊமை காயத்துடன்
வலியில்லாத விளையாட்டு
விதைத்து சென்ற
செயற்கை காயம்
சிலநேரங்களில் உதவும்
பல நண்பர்களின்
பள்ளி விடுப்பிற்கு..
கீழேவிழுந்த காய்களை
கால் பந்தாக்கி
ஆளுக்கால் மாற்றி
ஓடியோடி உதைத்து
போட்டியிட்டு முன்னேறினோம்
மெல்ல மெல்ல
வலிதாங்காத காய்களும்
வேறுவழியின்றி பயணித்தன
உடலெங்கும் உதைவாங்கி..
ஊரின் முகப்பு
தூரத்தில் தெரிந்தது
சிறுவர்கள் விளையாடி
மகிழ்ந்தனர் ஆங்கங்கே
சில சிறுவர்கள்
சீரான வட்டமிட்டு
கிட்டிப் புல்லை
கெந்தி விளையாடியும்
பறந்த தூரத்தை
அளந்து பார்த்தும்
ஆவலாய் விளையாடினர்
மட்டைபந்தின் முன்னோடியை
வாடகை சைக்கிளில்
சில சிறுவர்கள்
வேகமாக ஓட்டி
வீதியில் உள்ளோரை
பயமுறுத்தி சென்றது
பழக்கிக் கற்ற
பழைய ஞாபகத்தை
நினைவு படுத்தியது
நெஞ்சுக்குள் இனிமையாய்..
(பயணிப்போம்..24)