திண்டுக்கல் பூட்டின் வரலாறு

திண்டுக்கல் பூட்டின் வரலாறு:

பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு.

இப்படி இரு வகையான பூட்டுகளைத் தயார் செய்த பரட்டை ஆசாரி. அதனை கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்தார். கொஞ்ச நாள்கள் கழித்து கடைக்காரர்கள் அனைவரும் ஆசாரியைத் தேடி ஓடி வந்தனர். ஆசாரிக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரையும் வரவேற்று என்ன விஷயம் என்று விசாரித்தார். வந்திருந்த அனைவரும் ஆசாரியைப் பாராட்டியதோடு நில்லாமல், இதுபோல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் செய்ய தயாரானார். தனக்கு உதவுவதற்காக ஆள்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டார். பூட்டு வியாபாரம் அங்கிருந்துதான் சூடுபிடிக்கத் தொடங்கியது.

பரட்டை ஆசாரி மிகுந்த ஈடுபாட்டுடன் வழக்கமான ஒன்றாக இல்லாமல் அழகிய கற்பனைத்திறனோடும், நீண்ட நாள்கள் உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துத் திறக்க முடியாத அமைப்போடும் சிரத்தையுடன் பூட்டுகளைத் தயாரித்தார். பரட்டை ஆசாரியின் பூட்டுகளுக்கு நிகரில்லை என எல்லோரும் பாராட்டினார்கள். நிறைய ஆர்டர்கள் தேடி வந்தன.

நாளுக்குநாள் பூட்டின் வியாபாரம் அதிகமாக அதிகமாக பரட்டை ஆசாரியிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர்கள் அவரிடமிருந்து பிரிந்து, தனித்தனியாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.

பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிகமாக கிடைப்பதால் திண்டுக்கல் பூட்டு மிக மிக வளர்ச்சியடைந்து பிரபலமானது. இப்படியாக வளர்ச்சியடைந்த பூட்டுத் தொழில். 1945ம் ஆண்டு திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழானது.

எழுதியவர் : முரளிதரன் (8-Feb-14, 12:56 pm)
பார்வை : 391

மேலே