கல்லணைக்கோர் பயணம்28

கல்லணைக்கோர் பயணம்..28
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )

வீட்டிற்க்கு சக ஆசிரியர்
அப்பாவை சந்திக்கவர
தங்கையுடன் போட்டியிட்டு
கடைக்கு விரைந்தேன்
கலர் வாங்கிவர
வேகமான ஓட்டம்
யாரும் துரத்தாமலே
வளைந்து வளைந்து
தெருவை அளந்து
மெய்மறந்து ஓடினேன்
கடைக்கு செல்வதில்
கண்மூடித்தனமான ஆர்வம்
மிச்ச பைசாவில்
பிடித்ததை வாங்கி
ஆசையாய் உண்பது
அந்நாட்களில் வழக்கம்

வெட்டும்புலி வீட்டை
வேகமாய் கடக்கையில்
தடுமாறி விழுந்தேன்
தடம் புரண்டு
குப்புற விழுந்ததில்
குறுக்குவாட்டில் கிடந்தேன்
பெருமாள் கோவில்முன்
அங்கபிரட்தசனம் செய்வதுபோல்
பால்கறவை முடித்த
தட்சிணாமூர்த்தி அண்ணன்
வேகமாய் வீடுவிரைய
மிதிவண்டி ஏறியது
என்மேல் வேகமாய்
ஜல்லிபடர்ந்த வீதியை
செந்நீர் கழுவியது,
மெல்ல மெல்ல
சுயநினைவு தொலைந்தது
என்னைவிட்டு மெதுவாய்
மெய்மறந்த ஓட்டத்தால்

சிறிதுநேரத்தில் பச்சதண்ணி
பளாரென அறைந்தது
முகத்தில் வேகமாய்
நிமிர்ந்து பார்த்தால்
வீட்டின் பட்டாசலையில்
தட்சிணாமூர்த்தி அண்ணனின்
மிதிவண்டியின் பின்புறம்
அமர்திருந்தேன் அழுதமுகத்துடன்
பத்திரமாய் வீடுசேர்த்து
வருத்தத்தையும் பகிர்ந்துகொண்டார்
பால்மண(ன)ம் மாறாதவராய்
விழுந்தஅடி வெளிக்காயமாக
அம்மாவின்அடி உள்காயத்தை
கச்சிதமாய் உறுதிபடுத்தியது

உதைத்து உதாசீனப்படுத்தியதால்
கருங்கல் சாகும்வரை
மறையாத தழும்பை
தொடையில் பரிசளித்தது
மருத்துவ வசதி
இன்றும் இல்லாத
இடையாற்று மங்கலதிலிருந்து
இலால்குடி விரைந்தோம்
அப்பாவின் மிதிவண்டியில்
ஒருமாத சிகிச்சை
உடனடி தேவையென
மருத்துவர் ரமேஷ்
மருந்துடன் கட்டிட்டார்
கவன குறைவும்
முரட்டுத்தனமும்
வலியையும் வடுவையும்
ஆழமாய் இட்டது

தினமும் வேலைமுடித்து
அசதியாய் வந்தாலும்
மீண்டும் மிதிவண்டியில்
ஐந்து கிலோமீட்டர்
அழுத்திச்செல்வார் அப்பா
மருத்துவரிடம் கட்டிட்டு
சாப்பிட வாங்கிகொடுத்து
அழுத்துவார் மிதிவண்டியை,
தேவையற்ற கேள்விகளை
தினமும் அடுக்குவேன்
பதில் பெறும்வரை
திரும்ப திரும்ப
அமைதியாய் பதில்தந்து
கதையும் சொல்லவர்
அரைமணிநேர பிரயாணத்தில்
போதாகுறைக்கு அடம்பிடிப்பேன்
இன்னும் வேகம்பா...!
இன்னும் வேகம்பா...!
எனக்காக அழுத்துவார்
அசதியை துறந்து
வேகவேகமாய் மிதிவண்டியை
ஆவலில் அகமகிழ்வேன்
வேகமான பயணத்தால்..

(பயணிப்போம்..28)

எழுதியவர் : ஆரோக்யா (9-Feb-14, 8:18 pm)
பார்வை : 72

மேலே