இதுதான் உலகமடா
இதுதான் உலகமடா!
கேட்பவன் கையில் கிடைக்காது.
கிடைத்தவன் பையில் நிலைக்காது.
இருப்பவன் பெட்டி திறக்காது.
இல்லாதவன் சட்டி நிறையாது.
இதுதான் உலகமடா!
பணத்தைத் தேடித் திரிபவன் மனத்தில்
பந்த பாசம் இருக்காது.
குணத்தைத் தேடி அலைபவன் குடிசையில்
குடிக்கக் கஞ்சியும் மிஞ்சாது.
இதுதான் உலகமடா!
அடுத்தவன் வாழ அழகு பார்ப்பவன்
அவனுக்கு வறுமை தீராது.
அடுத்துக் கெடுத்து அதிலே ரசிப்பவன்
அவனைத் திருமை விலகாது.
இதுதான் உலகமடா!
நேர்மை விரும்பி நிசத்தில் வாழ்பவன்
ஊரில் தனிமை ஆவானே!
ஊரைக் கெடுக்க உள்மனம் கொண்டவன்
ஊருக்குப் பெரியவன் அவன்தானே!
இதுதான் உலகமடா!
அழகை நினைத்து அகிலம் பறந்து
அலுத்து சகதியில் விழுவானே!
கிடைத்ததில் பெருமை அடைவான் அருமை
உடையது அவனவன் பெறுவானே!
இதுதான் உலகமடா!
வண்ணம் பூசி எண்ணம் மயக்கும்
வலிமை பொய்க்கு இருந்தாலும்
பின்னம் வெளுத்து பேதமை பட்டு
உண்மையின் முன்னே நிற்காது,
இதுதான் உலகமடா!
ஏழை சொல்லு அம்பலம் ஏறா
என்றே பழமொழி சொன்னாலும்.
காலம் மாறும் கணக்கில் ஒரு நாள்
ஞாலம் தேறும் சத்தியமே!
இதுதான் உலகமடா!
கொ.பெ.பி.அய்யா.
குறிப்பு:அன்பு நண்பர்கள் சமூத்திற்கு வணக்கம்.இத்தளத்தில் தொடர் நாவலாக
“கரிசல்மண்ணில்ஒருகாவியம்”(177850)“
தொடர்ந்துவெளியாகிவருகிறது.இப்போது
பத்தாவது அத்தியாயம் வெளியாகியுள்ளதுஎன்பதைமகிழ்ச்சியுடன்தெரிவித்துக்
கொள்கிறேன்.தொடர்ந்து வாசித்து கதை வளம் கூட்ட கருத்தருள அன்புடன்
வேண்டுகிறேன்.மேலும் கவிதை படைப்பதை விட கதை புனைவது என்பது கடினம் என்பதையும்புரிந்துகொள்ளும்அனுபவம்அறிந்துகொண்டேன்.ஏனெனில்
ஒரு கதையைக் கூறும் போது அதற்காக எடுத்துக்கொண்ட களத்தைப் பற்றித்
தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் கட்டாயமாகிறது.எந்த வட்டாரத்தை களமாக வைத்துக்கொண்டு கதையைச் சொல்கிறோமோ அந்த வட்டாரத்தின் வழக்கு மொழி பண்பாடு கலாச்சாரம் சமூக அமைப்பு போன்ற அத்தனை அறிவையும் திரட்ட வேண்டியுள்ளது.எனவேதான் குறைந்த இடைவெளியில்
கதையைக் கொடுப்பதும் கடினமாகிறது.எனவே என்னால் இயன்றவரை வாரம்
இரண்டு தொடர்களை கொடுக்க முயற்சிக்கிறேன்.நன்றி!
அன்பன்:கொ.பெ.பி.அய்யா. .