மனிதத்துவம் சிறிதும் இல்லா மருத்துவர்கள் கட்டுரை

என் நெருங்கிய நண்பன் சிவராமன்.சர்க்கரை நோயால் கஷ்டப்பட்ட என் நண்பன் நீண்ட நாட்களாகவே மருந்து,மாத்திரைகளுடன் உயிர் வாழ்ந்தான்.மின்சாரத்துறையில் வேலை செய்து ஒய்வு பெற்ற அவன் தந்தையும் தாயும் அதில் கிடைத்த எட்டு லட்ச ரூபாயை வைத்துக் கொண்டு அவனைக் காப்பாற்றப் பலவகையிலும் போராடிப் பார்த்தனர்.நான் மிகவும் நெருங்கிய நண்பன் என்பதால் படுக்கையில் விழுந்த சிவராமனுடன் இரவு பகலாக அவனைக் காப்பாற்ற நானும் போராடினேன்.ஒவ்வொரு மருத்துவ மனையாக அலைந்து திரிந்தும் கையில் இருந்த எட்டு லட்ச ரூபாய் காலியானதே தவிர அவனைக் காப்பாற்ற முடியவில்லை.பணமும் தீர்ந்து ,மகனையும் பறி
கொடுத்த அந்தப் பெற்றோருக்கு கடந்த ஏழு வருடங்களாக ஒரு மகனாகவே இருந்து வருகிறேன்.
சிவராமனின் ஒரே அக்கா மீனா (தற்போது எனது அக்கா) இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் அருகிலேயே வசித்து வருகிறார்.அவருடைய மகள் வித்யா எம்.சி.ஏ.படித்துவிட்டு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாள்.அப்போது உடன் வேலை பார்த்த கோபால் என்பவருடன் காதல் கொண்டு திருமணமும் செய்து கொண்டனர்.
கோபமாக இருந்த அனைவரையும் சமாதானப் படுத்தி இணைத்து வைத்துத் திருமண வரவேற்பு முதல் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த வித்யாவின் வளைகாப்பு வரை அனைத்தையும் நான் முன்னின்று செய்து கொடுத்தேன்.மாப்பிள்ளை கோபால் மிக மிகத் தங்கமான பையன்.நாங்களாகத் தேடினாலும் அப்படி ஒரு மாப்பிள்ளை கண்டிப்பாகக் கிடைத்திருக்க மாட்டான்.அவன் வீட்டிலும் ,வித்யாவை ஒரு ராணி போலத்தான் பார்த்துக் கொண்டனர்.அவளை நல்ல மருத்துவரிடம் ஒவ்வொரு மாதமும் செக்-அப் செய்து நன்றாக இருப்பதாகவே மருத்துவர்கள் கூறினர்.சென்ற மாதம் ஒன்பது மாதம் முடிந்த நிலையில் ஒரு இரண்டு நாள் அவளுக்குச் சிறு நீர் போவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.கால்களில் வீக்கமும் ஏற்பட பயந்துபோய் உடனே கோவையின் பிரபலமான மருத்துவமனையில் சேர்த்தார்கள்.அவளுக்கு மஞ்சள் காமாலை கண்டிருப்பதாகவும் குழந்தையை உடனே அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.உடனே அப்படியே செய்து
அழகான பெண் குழந்தையை எடுத்துக் கொடுத்தும் விட்டார்கள். ஒரு மாதம் முன்பாகவே பிறந்து விட்டதால் குழந்தையத் தனியாகப் பிரித்து இன்குபேட்டரில் வைத்துவிட்டார்கள்.
அறுவை சிகிச்சை முடிந்த வித்யாவுக்கு மஞ்சள் காமாலை மிக அதிகமாகிக் கல்லீரலை பாதித்திருப்பதாகவும்,அதனால் சிறுநீரகமும் பாதித்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூற அதிர்ந்து போனோம்.அவளைத் தனியாக ஐ.சி.யு.வில் வைத்து மருத்துவம் பார்த்தார்கள்.அவள் மேல் உயிரையே வைத்திருந்த மாப்பிள்ளை அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடித்துப் போனார்.அவளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று மருத்துவர்களின் காலில் விழாத குறையாக கெஞ்சினார்.அவர்கள் சொன்ன அனைத்துக்கும் ஒத்துக் கொண்டார்.நான்கு நாட்கள் ஓரளவு பேசிக் கொண்டிருந்த வித்யா ஐந்தாம் நாளில் இருந்து மூச்சு மட்டுமே விட்டுக் கொண்டிருந்தாள்.இதற்குள்ளாகவே நான்கு லட்ச ரூபாய் மருத்துவ மனையில் கட்டியிருந்தோம்.மஞ்சள் காமாலை சற்றும் குறையாத நிலையில் பார்ப்பதற்கே பயமாக இருக்கும்படி நிறைய மருத்துவமனை உபகரணங்களை அவள் உடலில் பொருத்தியிருந்தனர். ஆறாம் நாளில் எங்களை அழைத்த மருத்துவர்கள்,அவள் மிகவும் சீரியசாக இருப்பதாகவும் சென்னை அப்போலோ கொண்டு சென்றால் அங்கு உடன் பிறந்த தம்பியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வார்கள் என்றுகூறினார்.கூடவே அதற்கு முப்பதில் இருந்து நாற்பது லட்சம் வரை செலவு ஆகும் என்றும் கூறினர்.சரி அப்படிக் கொண்டு சென்றால் காப்பாற்றி விடமுடியுமா? எனக்கேட்டால் அது உங்கள் ரிஸ்க்.நீங்கதான் முடிவெடுக்க வேண்டும் .இங்கிருந்து இந்த உபகரணங்களைக் கழட்டினால் கஷ்டம்தான் என்றும் பயமுறுத்தினார்கள்.என்ன செய்வது என்று தெரியாத நிலையில் மேலும் நான்கு நாட்கள் மருத்துவர்கள் கொடுத்த அனைத்து விதமான மருந்துகளையும் வாங்கிக் கொடுத்தும்,அவளை வைத்து மீண்டும் மீண்டும் அவர்கள் பணம் பிடுங்குவதிலேயே குறியாக இருந்தார்கள்.பத்து நாட்களாக பரிதவித்த அந்த உயிர் கடந்த வாரம் பிரிந்து விட்டது.அவள் இறந்து விட்டால் என்று எங்களுக்கே புரிந்து விட்ட நிலையிலும் மருத்துவர்கள் வென்டிலேசன் உதவியுடன் அவள் இன்னும் மூச்சு விடுவதாகவும் இன்னும் முயற்சிப்பதாகவும் சொன்னார்கள்.
நாங்களாகவே புரிந்து கொண்டு ,வேண்டாம் !நாங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று
கூறியபின் "நோயாளி இன்னும் உயிரோடு இருப்பதாகவும்,கணவர் வீட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும் எழுதி ,அவரிடமும்,சாட்சிக்கு என்னிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு ,அனைத்து பில்களும் செட்டிலாகி விட்டனவா என்று பார்த்து விட்டு அனுமதித்தனர்.

அதுவும் ,இறந்த அந்தப் பெண்ணை இறக்கவில்லை என்று கூறி மார்ச்வரி வேனில் ஏற்றாமல்,ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி,வீடு வரை சைரென் அடித்துக் கொண்டே வந்து இறக்கினர்.
பின் ஆக வேண்டிய காரியங்களை அழுதபடி நாங்கள் செய்தோம்.மறுநாள் காலை சுடுகாட்டில் எரிக்க முடிவு செய்தபோது,அவள் இறந்துவிட்டாள் என்ற சான்றிதழ் தேவைப் பட மருத்துவம் பார்த்த மருத்துவமனையில் கேட்டதற்கு,இங்கு இறக்க வில்லையே ,நாங்கள் எப்படித் தருவது என்று மறுத்துப் பார்த்தார்கள்.கோபம் கொண்ட நான் ,கோர்ட்டுக்குப் போவேன் என்று சத்தம் போட்டபின் அவர்கள் மருத்துவ மனையின் மேலாளருடன் பேசி விட்டுக் கையெழுத்திட்டனர்.
ஏறக் குறைய ஆறு லட்ச ரூபாயைப் பறித்துக் கொண்டு நோயாளியையும் காப்பாற்றாமல்,உடனிருப்பவர்களை அந்த நிலையிலும் இம்சைப் படுத்திய இவர்கள் மருத்துவர்களா? இல்லை இயந்திரங்களைப் பழுது பார்க்கும்,மெக்கானிக்குகலா? என்று எனக்குள் எழுந்த எண்ணத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
நன்கு படித்த ,ஓரளவு செலவு செய்யக் கூடிய எங்களையே கண்ணில் விரல் விட்டு ஆட்டிய இந்த மருத்துவர்கள் ,படிக்காத பாமர,ஏழை மக்களை என்ன பாடு படுத்துவார்கள்? பேசாமல் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் பணமாவது மிச்சமாகும் என்றே தோன்றுகிறது.

(இந்த மருத்துவர்களின் அலட்சியத்தால் ,வித்யாவுடன் பத்து மாதமே வாழ்ந்த கோபால்,இப்போது ஒரு பெண் குழந்தையுடன் கஷ்டப் படவேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்)

எழுதியவர் : கோவை ஆனந்த் (13-Feb-14, 6:51 am)
பார்வை : 327

மேலே