கல்லணைக்கோர்பழமையை மீட்கும் பயணம்32

கல்லணைக்கோர்(பழமையை மீட்கும்) பயணம்..32
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )

மழைக்கால மாலைபொழுதது
மெல்லிய தூறலும் ஓய
பள்ளியும் விட ,
படையெடுத்தனர் நண்பர்கள்
படைபடையாய் வீடுநோக்கி ,
இயற்கையோடு கலக்கும் நிகழ்வது
பெரியவர்சீலியிலிருந்து இடையாற்றுமங்கலம்
நோக்கிய களிப்பானபயணமது
செருப்பில்லாத கால்களும்
சாக்கு ஒத்த காலுடையும்
வெண்மை இழந்த சட்டையும்
சத்துணவு தட்டும்
சிற்சில புத்தகங்களும்
அடையாளமானது அவர்களுக்கு
எப்போதுமே பசுமை
போர்த்திய வயல்களும்
சோலையின் இடையே
மெல்லிய சாலைகளுமாய்
ரசனை மிக்க பயணத்தில்
ஒருவன் மட்டும் தனிமைபட்டான்
ஓடி விளையாடுகையில்,
கவனமாய் மிகவும் கவனமாய்
நடை பயின்றான் ..
காரணம் புரியவில்லை எவருக்கும்
அறிந்துகொள்ளும் ஆர்வமும் கூடியது
ஏதோ மறைகின்றான் எல்லோரிடமும்
புரிந்தது அவர்களுக்கு ..
விரட்டினார்கள் அனைவரும் அவனை
அப்போது பயம் கலந்த நடைபயின்றான்
அனைவரின் பார்வையும்
அவனை தின்றதால்
ஒப்புகொண்டான் உண்மையை ..
பள்ளி இடைவேளையில்
பாதிரியார் தோட்டத்தில்
வைக்கோல் போரில்,
கோழி இட்ட முட்டையை
திருடி வந்ததை
எடுத்துக்காட்டினான் அனைவரிடமும்
சந்தோஷ தாண்டவம் அவனுக்குள்
பயத்தை விதைத்த
நண்பர்கள் சிலர்
வைத்து விடுமாறு வற்புறுத்தினர்,
வேறுசிலரோ சாமியார்
வீட்டு முட்டையிது
பழிபாவம் சேரும் என்றனர்,
வேறொருவனோ மந்திரித்த முட்டையது
கை கால் விளங்காது என்றான் ,
அவன்மட்டும் உறுதியாய் உரைத்தான்
போங்கடா வேலைய பாத்துகிட்டு என்று
அனைவரும் நாளை
பள்ளியில் கண்டுபிடித்து
விடுவார்களோ என்ற பயத்தோடு
நடந்தனர் வாய்க்கால் கரையோரம்
சிறிது தூரம் சென்றதும் ஏதோ
ஓர் மணம் இழுத்தது அவர்களை
பனம்பழ வாடையது ...
பறிக்க தூண்டியது அனைவரையும்
மீண்டும் அவனே முதலாளாய்
துள்ளி ஏறினான் மரத்தில்
பையை கொடுடா என்றனர் நால்வரும்
சந்தேக கண்ணோடு பையையும் சுமந்து
வேகமாய் ஏறினான் குட்டிப்பனையில்
பறித்த பழங்களில் சிலவற்றை
அவன் பையே சாப்பிட்டது
ஒன்றிரண்டு விழுந்தது கீழே
நண்பர்களுக்காய் ...
பறித்த மகிழ்வில்
சறுக்கி இறங்கினான்
கட்டுப்பாடு இழந்து
கைகள் கைவிட்டது
நல்லவேளை கீழே குப்பைக்குழி
முகமெங்கும் அடி, தெறித்தன
முன்வரிசை பற்கள் இரண்டு,
முட்டையும் ரத்தமும் முகத்தில்
வாய்க்காலில் முகங்கழுவி
மெல்ல சேர்த்தனர் வீட்டில்..
அங்கோ அடிபட்ட அவனுக்கு
இரண்டாம் கட்ட
அடி விழுந்தது..
இன்றும் மேல்நாடு சென்று
அவன் சம்பாரித்த போதும்
ஊர் சென்று திரும்புகையில்
அவன் பற்களை கண்டதும் பழைய
ஞாபகம் தோற்றி கொள்கிறது..
பள்ளிக்கால நண்பர்களுக்கு..

(பயணிப்போம் ...32 )

எழுதியவர் : ஆரோக்யா (13-Feb-14, 11:35 pm)
பார்வை : 86

மேலே