திலீபனுக்கு பிறகான கண்கள்
காந்திகள் பலர் என்னிடம் வந்த பொழுது
கோவணங்களை கழற்றி
அகிம்சைகளில் போர்த்தியிருந்தேன்
அவமானம் தாங்கா ஒரு காந்தி
கொதிக்கும் தார்ப் பீப்பாவுக்குள்
எனை போட்டு விடலாமென
திட்டம் முன் வைத்தான்
இன்னொரு காந்தி
இருக்கும் உணவுகள் யாவற்றையும் பறித்து
நாறிய மலத்தை வாயில்
திணித்து விடலாம் என்றான்
மற்றொருவன் எனது தாயையும்
அக்காளையும்
கீழ்த்தரமான கெட்ட வார்தைகளால்
பேசலாம் என்றான்
வந்த காந்திகள் அனைவரும்
கொடுமையான திட்டங்களை நெய்ய
கிழிந்த எனது கோவணங்களினூடே
இறந்து போன அகிம்சையை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
முடியுமானால்
நீங்களும் பார்த்துக் கொள்ளுங்கள்
அவர் அவர் கோவணங்களினூடே
கிழிந்து போன அகிம்சையையும்
அழிந்து போன காந்திகளையும் .