கோவில் சொத்துல கைய வச்சா அதோகதிதான்

கோவில் சொத்துல கைய வச்சா அதோகதிதான் !!

ராமராஜ்யம் அயோத்தியில் நடந்து கொண்டிருந்த போது, மக்கள் யாராவது குறைகளைச் சொல்ல வருகிறார்களா என காவலர்களிடம் அக்கறையுடன் கேட்பார். இல்லை என்றே அவர்கள் பதிலளிப்பர். ஒருநாள் ஒரு நாய் ரத்தக்காயத்துடன் ஓடி வந்து ராமனைப் பார்க்க வேண்டும் என்றது. நாயை உள்ளே அனுமதிக்கச் சொன்னார் ராமர். ராமராஜ்யத்தில் எல்லா உயிர்களும் சமமே. ராமா! உன் ஆட்சியில் எனக்கு ஏற்பட்ட அவலத்தைப் பார்த்தாயா! ஒரு சன்னியாசி, சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை கல்லால் அடித்து விட்டான். காரணமே இல்லை, என்றது. சன்னியாசி இழுத்து வரப்பட்டார். ஏன் நாயை அடித்தீர்? அதுவா ராமா! நான் பிச்சை கிடைத்தால் மட்டுமே சாப்பிடும் பழக்கமுள்ளவன். இன்று பிச்சை கிடைக்கவில்லை. நான் பட்டினி கிடக்கிறேன்.

இந்த நாய், என் முன்னால் தனக்கு கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இந்த நாய்க்கு கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லையே என்ற எரிச்சலில் அடித்தேன்,. கொடியவனே! வாயில்லா ஜீவனை வதைத்திருக்கிறாயே! உனக்கு மரணதண்டனை,. அப்போது நாய் சொன்னது. ராமா! மரணதண்டனை போதாது. அதை விட கொடிய தண்டனை தர வேண்டும்,. ராமன் ஆச்சரியப்பட்டார். மரணத்தை விட கொடியது எது? என்றார். நான் சென்ற பிறவியில் ஒரு கோயில் அறங்காவலராக இருந்து, அங்குள்ள சொத்துக்களைச் சாப்பிட்டேன். அதனால் இப்போது நாயாகப் பிறந்து, குப்பையில் கொட்டுவதைச் சாப்பிடுகிறேன். கல்லடி வாங்குகிறேன். இவரையும் ஒரு கோயில் அறங்காவலரா போடுங்க! இந்த ஆள் நிச்சயம் கோயில் பணத்தை தின்பான். என்னை மாதிரி நாயா பிறந்து கல்லடி படட்டும், என்றது நாய் !!

எழுதியவர் : முரளிதரன் (16-Feb-14, 1:51 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 175

மேலே