வெண்ணிற மோகினி

ஒரு பகலைச்
சுருட்டிக் கொண்டிருக்கும்
அந்திப்பொழுதின்
பிறப்புரிமை பறித்தவளாய்
தென்றல் விலக்கித் தோள்சாய்வாள்
பளிங்கு முகத்தாள்

வெள்ளிப்பூக்கள் வீதியிலே
வெண்ணிற மோகினியாள்
பாதிக்குப் பின் பிணியுறுவாள்
மீதிக்குக் காத்திருப்பாள்
முடிவும் முதலுமாய் ......

தொலைந்தவரும் காதல் தேடி
அலைந்தவரும்
இமையோடிக் கிடக்கையிலே
இயற்றமிழாய் ஆற்றிடுவாள்
தெள்ளியதொரு புன்னகையாள்

வஞ்சியவள் சுய ராஜ்ஜியம்
நீல நாடோ - நெடும்
நீளக் காடோ ?!- அவளிடத்தோ
கரும்படைகள் உடைத்தெறியும்
வெண்முகில் வியூகங்கள்

கவிஞரோ
கற்பனைக் கலைஞரோ
தடாகத்திலே கண்டெடுக்கும்
சுந்தரப் பதுமையவள்
திங்களென்றும் பவனி வருவாள்
பாரினை உளவெடுக்கும்
உலவாளி

அல்லிக்குளத்தினுள்ளே
மையலுற்றுக்
காத்திருப்பாள் - காற்றுநுனி
தீண்ட நாணமுற்றுக்
கோலமிடுவாள்

கார்பன் தாளில்
வட்டமாகக் கிழிக்கப்பட்ட
துவாரம் அவளுருவம்
மாதம் ஒருமுறை
தேறுகின்ற பருவம்

மலர் முகத்தே
முகப்பருத் தடையங்களுடன்
தென்னங்கீற்றுகள் வருடிக்
குறுங்கவிதையாவாள்
மஞ்சள் பூசும்
மாதவமும் செய்தவள்

அன்னமூட்டும்
அமிழ்தினி மழலையர்க்கு
அபிராமிப் பட்டரின்
சித்தம் கலக்கி
அந்தாதியாகப் பிறந்தவள்

எங்கேனும் தவழும்
குளிரொளிக் குழந்தை
நிலம்தொடும் முன்னமே
அவள் ஆணைக்கு அடிபணியும்
உலகு ......

எழுதியவர் : புலமி (18-Feb-14, 11:29 pm)
பார்வை : 418

மேலே