புரட்சி எங்கே
அதுவொரு புத்தகக்கூடு
அதனின்று சிறைப்பட்டுக்
கிடந்தவொரு மௌனத்தோடு
உரையாடுகின்றேன்
வாசிப்பின் மூலம்
ஒரு அறப்போர்
கண்டுவிட்ட காந்தியமும்
புறப்போர் கொண்ட வீரியமும்
பத்தியமேற்றனவாய்
சோர்ந்திருந்தன
போகட்டும்
மீண்டும் முயல்கின்றேன்
வேறென்ன ???
கதைமாந்தர்களின்
கனம் தூக்கிப் போகின்றேன்
இறுதியில் இறக்கிவைக்க
களைப்பில் திசைமாறி
போனது பக்கங்கள்.....
அடுத்தொரு
விழிவிரிவில் அடங்குகிறது
புத்தம் - ஆசையே இல்லை
ஆர்வம் இருக்கலாமா ?!
அடுத்தப்பக்கம் காத்துக்கொண்டிருந்தது
நிதானித்துப் பார்த்தால்
அவைகள் புரட்சிக்குள்
அடக்கப்பட்ட தாள்கள்
பலகாட்சிகள்
உயிரோட்ட விதியில்
நகர்த்தப்பட்டு மரணமாய்
முடிக்கப்பட்டிருந்தது
இரு அட்டைகளின்
நடுவே குழுமங்களாய்க்
கூடியிருந்தன
அவற்றின் மீதான எதிர்பார்ப்புகள்
எனது விமர்சனம் உள்பட
பார்க்கவும் படிக்கவும்
பகிரவும் முடிகின்றது
எளிதாய்
துடிக்கவும் முடிந்தது
துணியவிடவில்லை என்னை நான்
அக்கூட்டுக்குள்
அகப்பட்டவளாய்த்
துணையுடன் தேடுகின்றேன்
புரட்சி எங்கே ???