நிலாமருட்சி
நிலாமருட்சி
============
வழக்கமில்லாத அயர்ச்சியின் நடுவே
நிலைத்தப்பிய உறக்கம்
காற்றுதவிர்த்த நிசப்தங்களினோடு
மழை அணிந்திருந்தது வீதி
கிடப்பிலேயே அசைந்தது பூமி
இலேசான ஒடிசலினூடே
எட்டிப்பார்க்க உரைத்தது கதகதத்தவானம்
பனிவெளிபோர்த்திய பூவெல்லாம்
புத்தாடை அணிந்த பொலிவுடன்
சஞ்சலிக்கத்துவங்கிற்று
வெட்கந்துறந்த மொட்டுக்களும்
அவைகளோடுகூடி சற்றேமுந்திப்பிளந்திருந்தன
திருவிழா உடுத்திய நகரமெங்கும்
நாகரீக தாவணிகளின்
மருண்டு சிறுத்தவிழிகளே மிரண்டு திரிந்தன
குளம்பியிற்நிரம்பிய ஆவியோடு
இதயத்திற்கு தொட்டடுத்த முகவரியில்
நீண்ட தாரைகளின் இசைமுழங்க
நவீன முரசுகள் தரைக்கொட்டின
அது இலையுதிர்க்காலத்தின்
கடைப்பருவமென்பதால்
கொடிகளுதிர்த்த இதழ்களும்
பச்சைவாடையுடன் எச்சமிருந்தன
பருத்துகருத்த என்விரல்கள்
நடுக்கந்தவிர்க்கும் பிடிப்பொன்றை
தேடிவிரையும் அத்தருணத்திலும் கூட
பார்வைமட்டும்
மதர்வினோடெங்கோ குழைகொண்டிருந்தது
காரைபெயர்ந்த அக்கதவின் முன்பகுதியில்
கண்ணாடித் துண்டின் குறுகுறுப்பினோடு
விடலைகளின் கேலித்திமிருகள்
ஆட்டமிட்டபடியிருந்தன
இளம்பெண்கள்
கோலமிடும் காட்சிளைத்தாண்டி
சாலையடுத்த எதிர்வீட்டின்
குறுகிய தாழ்வாரத்தின் தற்காலிக இருளை
திரைவிலக்கிக்கொண்டே வந்தன
விடியலின் மஞ்சள்பரிதிகள்
அனுசரன்