பெண்கொடியே பிறைமகளே

பத்திரமாய் வைத்திருந்த
பதிவுகளைக் காணவில்லை
நித்திரையை இழந்துவிட்ட
கண்திரையும் வலிக்கவில்லை

உத்திரவாய் ஒலித்திருந்த
சுதிகளையும் காணவில்லை
முத்திரையை பதித்துவிட்ட
உன்வரையும் விலகவில்லை

முக்கியமாய் கொண்டிருந்த
மதிச்சோலை பூக்கவில்லை
பொக்கிஷமாய் வைத்திருந்த
மனப்புதையல் காணவில்லை

உக்கிரமாய் ஆகிவிட்ட
சதிகளையும் தூற்றவில்லை
வக்கிரமாய் வீற்றிருந்த
விதிகளையும் மீறவில்லை

பத்தியமாய் உண்டிருந்த
உணவெதிலும் நாட்டமில்லை
சத்தியமாய் சொல்லுகிறேன்
எங்குள்ளேன் ஓர்மையில்லை

பெண்கொடியே பிறைமகளே
என்செய்தாய் சொல்லடியே
வன்கொடுமை என்னிலைமை
ஏன்செய்தாய் கல்லடியே

எழுதியவர் : உமர்ஷெரிப் (21-Feb-14, 1:03 pm)
பார்வை : 102

மேலே