சிறகுகள்

காலையில் எழும் பொழுதெல்லாம்
வண்ண சிறகுகள் சுமந்து
தேவதையாய் எழுகிறேன்
ஆனால்
எட்டுமணிவரை தூக்கமா?
என்ன பெண்ணோ ?
என்று அம்மாவின் வசவில்
ஒற்றை சிறகு உதிர்ந்து போனது
மரத்திற்கு மரம் தாவி விளையாடும்
அணில் பிள்ளையை தொடர்ந்து ஓடுகையில்
தரையில் கால் பாவாதா உனக்கு
அடக்கமாய் இருந்தாலென்னவென்று
அப்பா போட்ட அதட்டலில்
உதிர்ந்த மற்றொரு சிறகை உதறி விட்டேன்
தெருவடைத்து வண்ணக்கோலமிட்டு ரசிக்கையில்
வீதியில் நின்றென்ன வேடிக்கை
பிக்காசோவின் தங்கயா நீ என்று
அண்ணன் போட்ட சப்தத்தில்
உதிர்ந்த ஒற்றை சிறகை விட்டுவிட்டேன்
தோழிகள் புடைசூழ
கோவில் ப்ரஹாரம் சுற்றி வர
கூடி கொட்டமடிப்பதை பாரென்ற
பக்கத்து வீட்டாரின் பரிவர்த்தனையில்
உதிர்ந்து போன உல்லாச சிறகை உதிர விட்டேன்
கல்லூரி செல்ல எத்தனிக்கையில்
மாணவியாய் இருந்தது போதும்
மனைவியாய் இருவென்ற
கொண்டவன் கூற்றில்
மீண்டுமொரு சிறகை உதிர்த்து கொண்டேன்
அதிகாலை தூக்கம் , நாய் குட்டிகான ஏக்கம்
குட்டி குட்டி சேட்டை
வாய்கொள்ளா அரட்டை
அண்ணனோடு செல்ல சண்டை
தம்பியோடு கைகலப்பு
பேருந்தின் ஜன்னலோர இருக்கை
ஊஞ்சல் ஆட்டம் ,
கடற்கரை கால் நனைப்பு
என்று சின்ன சின்ன சுயத்தையும்
தொலைத்து விட்டேன்
இன்று
சிதிலமடைந்த சிறகுகள்
சிதறிப்போக
சுயமில்லாத என்னையே சிலுவையாய்
சுமக்கிறேன்
இன்றளவில் நடமாடுவது
நான் இல்லாத நான் .

எழுதியவர் : devirama (24-Feb-14, 9:48 pm)
சேர்த்தது : devirama
Tanglish : siragukal
பார்வை : 76

மேலே