ஓடும் இரயிலில் ஒரு காதல் கதை தொடர்கிறது
"முடிந்த கதை தொடர்வதில்லை என்று நீங்கள் நம்புகிறீர்களா" ? அப்படியென்றால் முடித்த கதை எடுத்தச் செல்ல உள்ளார் நம்மில் பலரும்".
படியுங்கள். ரசியுங்கள்.
ஓடும் இரயிலில் ஒரு காதல் கதை ..
சிறுகதை
பாகம் ஒன்று
சென்னையில் இருந்து மும்பை நோக்கி செல்லும் இரயில், டூ டாயர் ஏ.சி. கம்பார்ட்மெண்ட்டில் தன் இருக்கையைத் தேடி அடைந்து, கையில் இருந்த சிறிய சூட்கேசை இருக்கையின் கீழே வைத்துவிட்டு, வெளிவரும் நேரம், அவன் கண்களில் அவள் தென்படுகிறாள்.
குமரிப்பெண். வயது. இருபத்திரண்டு இருக்கலாம். மா நிற மேனி. கழுத்தில் ஒரு சிறிய தங்கக் சங்கிலி.அழகிய முகம் என்ற சொல்வதைவிட எவரையும் வசீகரிக்கும் வதனம் என்று சொல்லலாம். லிப்ஸ்டிக் இல்லை. இயற்கையாகவே செவ்விதழ்கள். காதில் பொன் வளையங்கள். அதைத் தவிர இரு செவிகளிலும் துளை இடப்பட்டு அதில் சிறிய பொட்டுப் போலிரு மொட்டுக்கள். வானவில்லை ஒத்திருந்த இமைகள். கூலிங் கிளாஸ் அணிந்திருக்கவில்லை. இடது கன்னத்தில் டிம்பிள் வேறு. கருங்கூந்தல். கட்டிவைத்திருக்க வில்லை. எனவே அவள் நடக்கும் பொழுதெல்லாம் அவள் கூந்தல் முடிகள் காற்றில் அங்கும் இங்கும் முல்லை மலர்க்கொடி போல் அசைந்த வண்ணம் இருந்தது. மிளிரும் கண்களில் மை இடப்பட்டிருந்ததால் கண்கள் காண்போரை மீண்டும் ஒருமுறை அவளைப் பார்க்கத் தூண்டும். நீல வர்ண ஜீன்ஸும், வெள்ளை நிறத்தில் டி-ஷர்ட்டும் அணிந்திருந்தாள். டி-ஷர்ட்டின் ஒரு புறத்தில் இதயத்தின் படம் இளம் சிகப்பு நிறத்தில் இருந்தது. அங்கு தான் அவள் இதயம் இருக்கிறது என்பதை பிறருக்கு பகிரங்கமாக தெரிவிப்பது போல் இருந்தது. இடதுகை மோதிரவிரலில் மோதிரம். கை நகங்களில் பளபளக்கும் மெரூன் வர்ணத்தில் பூச்சு. கால்களில் உயர்த்த தோல் காலணிகள். மொத்தத்தில் அவள் யவ்வனத்தை வர்ணிப்பது என்றால் .. பீஷ்மர் காலத்தில் இவள் பிறந்திருந்தால் அவர் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சபதம் செய்திருக்க மாட்டார் என்றே சொல்லலாம்.
அவசரமாக வந்து, கதவைத் திறந்து உள்ளே நுழையும் பொழுது, கையிலிருந்த சூட்கேஸ் தடுக்கவும், அருகில் நின்று இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அவன், கதவை ஒரு கையால் பிடித்தக் கொள்ளவும், அவள் கடந்து செல்லும் பொழுது திரும்பி அவனை நோக்கி, "தேங்க்ஸ்" என்றாள். அதற்கு பதிலாக அவன் "வெல்கம்" என்று சொல்லி புன்முறுவல் செய்தான்.
இவள் பெண்ணா .. இல்லை தேவதையா .. அவன் நினைத்தான்.
பாகம் இரண்டு.
"பெண் போனால் .. இந்தப் பெண் போனால் ..
இவள் பின்னாலே என் கண் போகும்" ..
தன் இருக்கையை நோக்கி சென்ற அவன் மனதில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த அந்த தமிழ்த் திரைப்படப் படப்பாட்டு ஏன் நினைவிற்கு வந்ததோ ?
அழகிகளை வர்ணித்து பாடிய அந்தக் கவிஞர்கள் எல்லாவற்கும் மனதில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டே, அவன் இருக்கையை வந்தடைந்தான்.
அவன் சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை. அப்படி ஒன்று நடக்கும் என்று.
அவன் கண்களை நம்ப அவனால் முடியவில்லை. கண் முன்னே தோன்றியவளின் கனிமுகம் கண்ணெதிரே வீற்றிருக்குமென்று கனவிலும் கருதியிருக்கவில்லை அவன்.
ஆம். அவள் அவன் இருக்கைக்கு எதிர் இருக்கையில் இருக்க, காரணம் புரியாத ஒருவித மகிழ்ச்சி உடலெங்கும் ஊடுருவத் தொடங்கியது.
அவன் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான். எதிரில் அவள்.
அப்பொழுது மெல்ல நகர்ந்து இரயில். ஆனால் அவன் மனமோ இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியது.
பாகம் மூன்று
“சிட்டுக்குருவி .. முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே ..
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே ..
சிட்டுக்குருவி போல் அவன் மனம் அங்கும் இங்கும் பறந்த வண்ணம் இருந்தது. இரயில் வேகம் இன்னும் சற்று அதிகரித்தது.
எப்படியாவது அவளுடன் பேசவேண்டுமே .. என்ன செய்யாலாம் என்று எண்ணியவாறு, ஜன்னலை மூடியிருந்த திரைச்சீலையை அகற்றி, வெளியே தன் கண்களைப் பதித்தான்.
சற்று நேரம் செல்ல ..
பயணச்சீட்டு பரிசோதிக்கும் இரயில் அதிகாரி வந்தார்.
அவரிடம் உடனே, அந்தப் பெண்ணழகி தன் கைப்பையை திறந்து பயணச்சீட்டை எடுத்து கொடுத்தாள். அதைப் பார்த்த அவர், இதில் இரண்டு பேர்கள் உள்ளனர். மற்றொருவர் ... ? என்று கேட்டு அவளைப் பார்க்கவும் அவள், "சார் .. அந்த மற்றொருவர் என் தந்தை .. அவர் வயதானவர். சற்று உடல் நலம் குன்றியவர். மேலும், மூட்டுவலியால் அவதிப்படுபவர். அவருக்கு மேலிருக்கை (அப்பர் பெர்த்) கொடுத்திருக்கிறார்கள். இங்கிருந்து சற்று தள்ளி அமர்ந்திருக்கிறார். இதோ, இங்கு எதிரில் இருக்கும் இருக்கையை அவருக்கு மாற்றித்தந்தால் மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன்" என்று கூறுவதற்குள் பரிசோதகர் அவனை விளித்து, "உங்களுக்கு அந்த பெரியவர் இருக்கும் இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொள்வதில் ஏதேனும் ஆட்ஷேபனம் உள்ளதா" என்று கேட்கவும், அவன் உச்சி மலையிலிருந்து குப்புறக் கீழே விழுவது போல் ஒரு உணர்வுடன்,, என்ன சொல்வதென்று தெரியாமல், சுருக்கமாக, "நோ ப்ராப்ளம்" என்று சொல்லி, சூட்கேசை எடுத்துக் கொண்டு, "இருக்கை எண்ணைக் கேட்டுவிட்டு, மெல்ல நகர்ந்தான்.
அவனை நோக்கி அவள் மீண்டும் ஒரு முறை, "தேங்க்ஸ்" என்று சொல்லி புன்னகைத்தாள். அவன் நடந்தவாறே மனதில், "பறந்து செல்ல சிறகிருந்தும் பறவை துணை இல்லையே .. எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே" .. என்று நினைத்துக் கொண்டான்.
முதியவரின் இருக்கையை அடைந்து, அப்பர் பெர்த்தில், பெட்டியை வைத்துவிட்டு, அப்படியே சாய்ந்து கொண்டான்.
"என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே .. கண்ணைக் கொடுத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே" என்று அவன் மனம் முணுமுணுத்தது.
ஒரு காதல் கதை இப்படிப்பட்ட முடிவு பெறலாகாது என்று எண்ணிய எனது நபர் ஒருவர் என் சம்மதம் பெற்று, கதையை தொடர்கிறார்.
படியுங்கள் மேலும் ..
தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தை அவனால் அவ்வளவு எளிதாக ஜீரணிக்கமுடியைல்லை.
மனதில் ஏதோ ஒன்று "மகனே! உன் காதல் தீவிரமாக இருந்தால் கட்டாயம் அது கைகூடும் என்று முணுமுணுத்துக்கொண்டே இருந்ததது".
வாழ்க்கையில் பல வெற்றி தோல்விகளை சந்தித்திருக்கிறான். தோல்விகளை வெற்றியாக மாற்றி இருக்கிறான்! ஆம்! காலேஜ் 20-20 ஓவர் மேட்சில் கடைசி பந்தில் ஒரு ஸிக்ஸர் அடித்து தோல்வியை வெற்றியாக மாற்றி எல்லோரது பாராட்டுதலையும் பெற்றது நினைவிற்கு வந்தது!
எப்பொழுது மன்மத பாணம் தாக்கிவிட்டதோ அவன் அதிலிருந்து மீளமுடியாது என்பது நிச்சியம்.
" காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற்பெண்கள் கடைக்கண் பணியிலே" என்று பாடிய அந்த முண்டாசுக்கவிஞ்சன் பாடியது அவனுக்கு நினைவிற்கு வந்தது!
வண்டியின் சீரான சத்தம் 'முடியும்', முடியும்', 'முடியும்' என்றுதான் ஒலித்தது!
திடீரென்று இருமல் சத்தம் அவன் கோட்டை விட்டுச்சென்ற கம்பார்ட்மென்ட்டிலிருந்து பயங்கரமாக ஒலித்தது!
அந்தப்பெரியவர்தான் அவஸ்தைப்படுகிறார்.
"திறந்தான் பெட்டியை! எடுத்தான் அந்த ஆயுர்வேதிக் பாட்டிலை!!
விரைந்தான்!!! திறந்தான் !!! அளித்தான் சுண்டைக்காய் அளவு லேகியத்தை!!
வாயில் திணிக்காத குறைதான்!!
அவருடைய அந்த வரட்டு இறுமல் சென்னையை நோக்கி திரும்பிவிட்டது!!
மாதுங்காவில் இருக்கும் அவன் அத்திம்பேருக்காக அவனுடைய அன்புத் தாயார் பல வைத்தியர்களின் யோசனையில் வீட்டிலேயே தயாரித்தது!
பெரியவர் கண்ணில் தண்ணீர் வராத குறைதான்!
இவை யாவற்றையும் கண்டு வியப்பும் அதிர்ச்சியும் அடைந்த அவன் மனோராணி உணர்ச்சி வசத்தில் அவன் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு கண்களால் நன்றியை தெரிவித்தாள்!
பிறகு தன் செய்கைக்கு வெட்கித்து கைகளை விடுவித்துக் கொண்டாள்!
ஏற்கனவேயே சிவந்த அந்த தாமரை முகம் குங்குமச் சிவப்பாயிற்று!!
பெரியவரோ இதை கண்டும் காணததுபோல் அடுத்த கட்டத்தில் இறங்கினார்!
வேறென்ன? ஊர், பெயர், ஜாதகம்தான்!
மனைவியை இழந்த பெரியவருக்கு ஒடும் வண்டியில் கிடைத்த மருமகன், மகனாகவே இருப்பான் என்ற தளராத நம்பிக்கைதான்!
ஆமாம், அத்திம்பேருக்கு சேர்ப்பிக்கவேண்டிய மருந்து பாட்டில் என்னாவது?
இதென்னய்யா, சம்பந்தம் இல்லாத கேள்வி?
அவருக்கு ஒண்ணும் ஆகாது!! இன்னும் கொஞ்சநாள் இருமிக்கொண்டுதான் இருக்கட்டுமே!
கல்யாணத்திற்கு வரத்தான் போகிறார்! அப்பொழுது ஒரு கப்பல் மருந்தே வாங்கிக்கொடுத்தால் போச்சு!!!
இது எதையும் கண்டு கொள்ளாமல் அந்த நிற்காத வண்டி டும்! டும்!! டும்!! டும்!! என்று கல்யாணமேளத்தின் ஓசையுடன் சென்று கொண்டிருந்தது!!---அப்படித்தான் அவன் காதிற்கு ஒலித்தது!!
(எங்கே வாழ்க்கை தொடங்கும். அது எங்கே எவ்விதம் முடியும். இது தான் வாழ்க்கை. இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதை எல்லாம் மாறி வரும். பயணம் முடிந்து விடும். மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும். கவிஞர் கண்ணதாசன்).
= முற்றும் =