இருபது ஆண்டுகளுக்குப் பிறகு - தமிழில்

பின் வரும் சிறுகதையானது பிரபல அமெரிக்க ஆங்கிலச் சிறுகதை எழுத்தாளராகிய ஒ. என்ரி என்றழைக்கப்படும் வில்லியம் சி்ட்னி போர்ட்டர் என்பவரால், "After Twenty Years" என்னும் தலைப்பில் எழுதப்பட்டதாகும். இச்சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த ஆங்கிலச் சிறுகதையாகும். அதனை இவண் தமிழில் காண்போம்.

ஒரு நாள் ஒரு காவலர் நியு யார்க் நகர வீதிகளில் இரவு பத்து மணி அளவிற்கு ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அவர் பூட்டப்பட்ட கடையின் முன் ஒரு மனிதன் நிற்பதைக் கண்டார். அவனிடம் சென்று அவன் எதற்காக கொட்டும் பனியையும் பொருட் படுத்தாமல் அங்கு நின்றுக் கொண்டிருந்தான் என்று வினவினார்.

அதற்கு அம்மனிதன் தன் பெயர் பாப் என்றுக் கூறி புகைக் குழாயினைப் பற்ற வைத்தான். அதில் அவன் முகத்தினைக் காவலரால் காண முடிந்தது. அவன் முகத்தைக் கண்ட அவர் அவன் ஒரு பெரிய பணக்காரனான இருக்க வேண்டும் என்பதனை அவன் அணிந்திருந்த உடை மற்றும் கணையாழியின் மு°லம் ஊகித்துக் கொண்டார். பிறகு அவன் அவரிடம் பின்வருமாறு கூறினான்:

"நானும் ஜிம்மி வெல்சும் உற்ற நண்பர்கள். எங்கள் இருவரைப் போன்ற உற்ற நண்பர்களை எங்கும் காண இயலாது. எங்களுக்குள் மனக் கசப்பு என்றும் ஏற்பட்டதே கிடையாது. இருபது ஆண்டுகளுக்கு முன் நான் பதினெட்டு அகவை நிரம்பிய வாலிபனாக இருந்தேன். என் நண்பன் ஜிம்மி வெல்சு இருபது அகவை நிரம்பிய வாலிபனாக இருந்தான். நாங்கள் இருவரும் இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளில் இதே இடத்தில் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டோம். அதன் படி சரியாக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நாம் இருவரும் உயிரோடு இருந்தால், நாம் எங்கு இருந்தாலும் எவ்வளவுத் தொலைவில் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் இதே இடத்தில் இதே நேரத்தில் ஒருவரை யொருவர் சந்திக்க வேண்டும். இன்று அந்நாளாகும். நாங்கள் இருவரும் இதே இடத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் இரவு பத்து மணியளவிற்கு அவ்வாறு ஒப்பந்தம் செயதுக் கொண்டு பிரிந்துச் சென்றோம்".

அவர் பாபிடம், ஜிம்மி வெல்சுடன், பிரிந்துச் சென்ற பிறகு அவன் தொடர்பு ஏதாவது வைத்திருந்தானா என்று வினவினார். அதற்கு அவன் அவர்கள் இருவரும் பிரிந்துச் சென்றவுடன் அவன் பிழைப்புத் தேடி மேற்கு நோக்கிச் சென்றதாகவும் ஆனால் ஜிம்மி வெல்சு மட்டும் நியு யார்க் நகரிலேயே இருந்து விட்டதாகவும் கூறினான். மேலும், பிரிந்துச் சென்ற பின் ஓரிரு ஆண்டுகள் வரை மட்டும் அவர்கள் இருவருக்குமிடையில் தொடர்பு இருந்ததாகவும் கூறினான்.

காவலர் மணி பத்தைக் கடந்து விட்டதாகவும் இனியும் அவன் நண்பன் ஜிம்மி வெல்சு அங்கு வருவான் என்ற நம்பிக்கை அவனிற்கு உள்ளதா என்று வினவினார். அதற்கு பாப், "என் நண்பன் ஜிம்மி உயிருடன் இருந்தால் தவறாமல் என்னைக் காண வருவான்" என்றான். பிறகு அடுத்த அரை மணி நேரம் வரை தன் ஜிம்மிக்காக காத்திருக்கப் போவதாகவும் கூறினான். பிறகு காவலர் அவனிடமிருந்து விடைப் பெற்றுக் கொண்டார்.

பாப் தன் உயிர்த் தோழன் ஜிம்மிக்காக ஆவலுடன் ஒவ்வொரு நிமிடமாகக் காத்திருந்தான். சற்று நேரத்தில் ஒரு உயரமான மனிதன் தலையில் தொப்பியுடனும் உடம்பில் குளிர்கால உடையுடனும் எதிரில் வந்துக் கொண்டிருந்நதான். அவன் அவ்வாறு வந்துக் கொண்டிருக்கையில் பாப்பை நோக்கி, "அது நீ தானா பாப்?" என்று வினவினான். பாபும் உடனே, "யார் ஜிம்மியா?" என்று வினவினான். பிறகு இருவரும் உள்ளக் களிப்பில் ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு நடக்கத் தொடங்கினர். அந்த இருபது ஆண்டு இடைவெளியில் ஜிம்மி சற்று உயரமாகி விட்டதாக பாப் கூறினான். மகிழ்ச்சிக் களிப்பில் ஒருவரைப் பற்றி ஒருவர் உசாவிக் கொண்டு சிறிது தொலைவு நடந்து வந்நனர்.

ஒரு கடையின் அருகில் வந்தவுடன் அங்கிருந்த வெளிச்சத்தில் ஜிம்மியின் முகத்தைக் கண்டு பாப் திடுக்கிட்டான். தன்னுடன் இருப்பவன் தன்னுடைய உற்ற நண்பன் ஜிம்மி இல்லை என்பதனை அவன் உணர்ந்தான். பிறகு அவனின் கையை விலக்கி விட்டு, "இருபது ஆண்டு கால இடைவெளியில் ஒரு மனிதன் சற்று உயரமாவதற்கு வாய்ப்பு இருக்கிறதென்றும் ஆனால் ஒரு மனிதனுடைய மு°க்கின் புறத் தோற்றம் முழுமையாக மாறும் அளவிற்கு அஃதொன்றும் பெரிய இடைவெளி இல்லை" என்றும் கூறினான்.

உடனே பாபுடனிருந்த அந்த மனிதன் பத்து நிமிடங்களுக்கு முன் பாப்பை அவன் சிறைப் பிடித்து விட்டதாகக் கூறினான். அதைக் கேட்டுத் திடுக்கிட்ட பாபிடம் அவன் ஒருத் தாளினைக் கொடுத்தான். அத்தாளில் பின் வருமாறு எழுதியிருந்தது:

"பாப் குறித்த நேரத்தில் நான் அங்கு வந்திருந்தேன். நீ உன் புகைக் குழாயினைப் பற்ற வைத்த போது உன் முகத்தினை என்னால் நன்கு காண முடிந்தது. மேலும், அம்முகமே நியு யார்க் நகர காவலர்களால் பெரிதும் தேடப்படும் முகம் என்பதனையும் உணர்ந்தேன். ஆனால், என்னால் அதைச் செய்ய இயலவில்லை அதனால் தான் என்னுடன் பணிபுரிபவரை அதனைச் செய்யுமாறு வேண்டிக் கொண்டேன் - ஜிம்மி வெல்சு"

இதனைப் படித்து முடித்தவுடன் பாபின் கை நடுங்கியது!

எழுதியவர் : Yaazhini Kuzhalini (4-Mar-14, 4:25 pm)
சேர்த்தது : Yaazhini Kuzhalini
பார்வை : 166

மேலே