பிழைத்துக் கொண்டான்
மெய்யிலே மெய்யை மட்டும்
நெய்யெனப் பூசிடும் நானக்
கையிலே காஞ்சனம் இன்றி
கண்டிடும் தேசிகர் ஆனார்.
அரிதம் எங்கிலும் அரிதாய்
அரிசியும் உமியும் போல்வர்
சரிதம் படைத்த நற்சீடர்
சரி பாலா மரதானா ஆவர்.
சந்திர குலத்தைச் சுட்டும்
“சந்த்”தெனும் செல்வர் வீட்டில்
சந்தம்பல நூறு கொண்ட
செயக்கொடி பறந்திடக் கண்டார்.
விந்தை யிதுவென் றெண்ணி
விசாரித்து வந்த வேளை
உடையவர் பொன்னும் பொருளும்
அடைந்தும் ஆசை தீராதார்.
பறந்திடும் கொடிகள் நூறும்
பரவலாயவர் பெருமை பேசும்
உறவென வந்து நின்றாலே
உரிமையில் துரத்தி ஏசும்.
கள்ளமனம் சேர்த்த சொத்தில்
கஞ்சன் வாழ்வது கண்டு
பள்ள மவருள்ள மென்றே
வெள்ளி முகத்தை சுளித்தார்.
“செம்மலே இத்தனை இருந்தும்
சேர்த்திடல் வேண்டும் மேலும்
செய்யலே பொருளின் சிறப்பு
செப்புவீர் வேறொன் றிருப்பின்”
”செயலென்ப நல் லொழுக்கம்
சேமமும் அதுவே யின்பம்
சேடமே உண்மைப் பெருமை
செய்குவாய் தானம் தருமம்.”
உரையது கேட்டு உறைந்து
குரங்கது இஞ்சியைக் கடித்து
குய்யெனச் சுருங்கியதைப் போல்
வெய்யிலிற் புழுவாய் நெளிந்தான் .
கந்தருவம் செய்யும் குருவும்
அந்தரங்க மனங் கண்டாங்கே
“மந்திர ஊசியாம் இதனை
மறுபிறவியில் தந்திடு”என்றார்.
சிந்தையில் சிறிய மூர்க்கன்
சிரித்து சிலாக்கியப் பட்டு,
“செத்த பின் இவ்வூசியென்ன
சிறுமணலும் கூட வராதே”
“புந்தியில் உரைத்ததென்றால்
இந்துவின் பெயர் விளங்க
“சந்”தனே தந்திடு அனைத்தும்
சத்திர மாக்கிடுன் வீட்டை”
முத்தனின் மொழியைக் கேட்டு
மூசலின் பயனை யுணர்ந்து
சத்திய வாய்மொழி பற்றி
சந்தனும் பிழைத்துக் கொண்டான்.