- கட்டுரை இன்னிசை, நேரிசை வெண்பாக்கள் -ஒரு குறிப்பு

இன்னிசை வெண்பா:
-வெண்பாவின் பொது இலக்கணம் அனைத்தையும் பெற்றது.
-நான்கு அடிகளைக் கொண்டது;
-முதல் மூன்று அடிகளும் நந்நான்கு சீர்களைக் கொண்டிருக்கும்;
-நான்காவதான இறுதி அடி மூன்று சீர்களைக் கொண்டிருக்கும்;
-ஈற்றடியின் இறுதிச் சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாடுகளைக் கொண்டு முடியும்;
-முதல் இரண்டடிகளின் முதற்சீர்களிலும் ஓரெதுகையும், அடுத்த இரண்டடிகளின் முதற்சீர்களில் ஓரெதுகையும் அமைந்திடலாம்;
-நான்கடிகளின் முதற்சீர்கள் அனைத்திலும் ஒரே வகையான எதுகை அமைந்தால் சிறப்பு;
-வெண்பாவின் ஈற்றடியின் இறுதிச் சீர் காசு,பிறப்பு, நாள்,மலர் என்ற வாய்பாட்டில் முடிவதனைத் தவிர, மற்றச் சீர்கள் அனைத்தும் காய்ச்சீராக அமைந்துவிட்டால் ஏந்திசைச் செப்பலோசை பெற்றுச் சிறப்பானதாக அமையும்;
-இன்னிசை வெண்பாவுக்கு முதல் அடியின் முதற்சீரில் அமைந்த அதே எதுகை, இரண்டவது அடியின் முதற்சீரிலும் அமைந்திருத்தல் வேண்டும்; ஆனால், இரண்டாவது அடியின் இறுதிச் சீரில் அதே எதுகை அமைந்திடுதல் தேவையில்லை; தனிச்சொல்(தனிச்சீர்) பெற்றுவராது.
எ-டு:
மோனத் தவமிருந்து முக்திநிலை பெற்றோம்காண்!
ஆனந்தம் எம்முள் அளவின்றிப் பாயுதுகாண்!
கானக் குயிலோசை காதுகளில் கேட்குதுபார்!
வானக் கொடையா நீ வந்து! .........(எசேக்கியல்காளியப்பன்)
மேலே அமைந்துள்ள இன்னிசை வெண்பா (திரு அகன் அவர்கள் தனது பேரனை வானக் கொடையாகக் கொண்டாடி எழுதிய வரிகளை வெண்பா யாப்பில் யான் வடிக்க முயற்சித்தபொழுது எழுதியது) முதல் மூன்றடிகளும் அடிக்கு நான்கு நான்கு சீர்களையும், ஈற்றடியில் மூன்று சீர்களையும், நான்கடிகளிலும் ஒரே வகையான எதுகையைக் கொண்டுள்ளது.

நேரிசை வெண்பா:
-தக்க ஓசையும் தக்க சொல்களும் பெற்று வருவது நேரிசை வெண்பா;
-வெண்பாவின் பொது இலக்கணங்கள் அனைத்தையும் பெற்று நான்கு
அடிகளைக் கொண்டு விளங்குவது;
-முதலடியின் முதற்சீரில் அமையும் எதுகை , இரண்டாவது அடியின் முதற்சீரிலும் அமைந்து இரண்டாவது அடியின் இறுதிச் சீராகிய தனிச் சீரிலும் அமைந்திருத்தல் வேண்டும்;
-முதல் மூன்று அடிகளும் நந்நான்கு சீர்களைக் கொண்டிருக்கும்;
-நான்காவதான இறுதி அடி மூன்று சீர்களைக் கொண்டிருக்கும்;
-ஈற்றடியின் இறுதிச் சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாடுகளைக் கொண்டு முடியும்;
-மேல் இரண்டடிகளுக்கு ஓரெதுகையும், கீழ் இரண்டடிகளுக்கு ஓரெதுகையும் அமைந்திடலாம்;
-நான்கு அடிகளின் முதற்சீர் அனைத்திலும் ஒரே வகையான எதுகை பெற்றிருப்பது சிறப்புடையதாகும்;
எ-டு:
ஒன்றே இறையுலகில்! உண்டே அதனருளில்
நன்றே களிப்பெய்தல், நாம்கூடி! – இன்றே
பிரிகின்றோம் இல்லை பெருந்தேச மக்கள்
விரிகின்றோம் தொண்டு விழைந்து. .......(எசேக்கியல்காளியப்பன்)

மேலே உள்ள நேரிசை வெண்பா,
-முதல் மூன்று அடிகளிலும் நந்நான்கு சீர்களைக் கொண்டுள்ளது;
-நான்காவதான இறுதி அடி மூன்று சீர்களைக் கொண்டிடுள்ளது;
முதல் இரண்டடிகள் ஓரெதுகையும்,அடுத்த இரண்டடிகள் வேறு ஓரெதுகையும் கொண்டுள்ளது;
-இதனை இரு விகற்ப வெண்பா என்றும் கூறுவர்;
-இரண்டாவது அடியின் இறுதிச் சீர் தனிச் சீராக அமைந்து,இரண்டாவது அடியின் முதற்சீரின் எதுகையையும் கொண்டுள்ளது; இது கட்டாயமாக நேரிசை வெண்பாவிற்கு அமைய வேண்டியதாகும்;
-ஈற்றடியின் இறுதிச் சீர் பிறப்பு என்னும் வாய்பாடு கொண்டுள்ளது;

**இக்கட்டுரை படித்த திரு கலை :

-காய்ச்சீர் என்றால் என்ன ? காசு, பிறப்பு, நாள், மலர் என்ற வாய்ப்பாடுகள் என்று எதனைக் குறிக்கிறீர்கள் ? அப்படி என்றால் என்ன? (காசு, பிறப்பு, நாள், மலர் என்றால் என்ன?-
என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

1. காய்ச்சீர் என்பது இருவகைப்பட்ட மூவசைச் சீர்களில் காய் என்ற முடிவு கொண்டு வரும் ஒன்று; அது
தே/மாங்/காய்- நேர் நேர் நேர் என்றும்
புளி/மாங்/காய்- நிரை நேர் நேர் என்றும்
கரு/விளங்/காய்- நிரை நிரை நேர் என்றும்
கூ/விளங்/காய்- நேர் நிரை நேர் என்றும் வருபவை.
இதனை வெண்பா உரிச்சீர் என்றும் வழங்குவர்.

மற்றொன்று கனி என்ற முடிவுகொண்ட இதே போன்ற மூவசைச் சீராகும். வெண்பாவில் கனிச்சீர் இடம்பெறாது; அதனால் அதை இங்கு விரித்துரைக்கவில்லை;

2.கா/சு, பிறப்/பு, நாள், மலர்- என்பன ஓரசைச் சீர்களுக்கு அலகிட்டுக் காட்டுவதற்கு வசதியாகக் கொடுக்கப்பட்ட பெயர்களே.

இனிச் சீர்கள் பற்றிய இலக்கணம் படித்தபொழுது கண்டவைகளை உங்களுடன் பகிர இருக்கிறேன்:

ஓரசைச் சீர் என்பது ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா முதலிய பாக்களில் வாரா.
வெண்பாவில் மட்டும் இறுதிச் சீராக-காசு,பிறப்பு,நாள், மலர் என்னும் வாய்பாட்டில்(வாய்ப்பாட்டில் அல்ல, கவனிக்கவும்) அமையும்.
காசு,பிறப்பு இரண்டிலும் குற்றியலுகரம் இருப்பதனால், அந்தக் குற்றியலுகரமும், பிறப்பில் உள்ள பகர மெய்யும் அலகு பெறா.
காசு-நேர்; பிறப்பு-நிரை; நாள்-நேர்; மலர்-நிரை.
இங்கு கவனிக்கப்பட வேண்டியது-காசு, பிறப்பு இரண்டும் ஈரசைச் சீர் போல இருப்பினும், அலகிடும்பொழுது கா, பிறப்,
என்பதோடு நின்று ஓரசைச் சீராகவே கருதப்படுகிறது என்பதே!
காசு, நாள் என்பன நேர் என்ற வாய்பாடென்பதில் காசு என்பது, ஈரசைத் தோற்றமாகவும், நாள் என்பது ஒற்றடுத்த, தெளிவான ஓரசைச் சீராகவும் காட்டப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது;
அதுபோலவேதான் பிறப்பு,மலர் என்ற இரண்டும் மலர் என்ற நிரை அசை வாய்பாடாகக் கொள்ளப்படுவது கவனிக்கத்தக்கது.
எ-டு:
உழைப்போரைப் போற்றி உனதுதோழர் தேற்றி
இளைத்தோர்க் கிரங்கி எடுத்த – தொழிலெதிலும்
நேர்மையே பற்று! நினைப்புளும்,கை யூட்டொழி!
கூர்மை மனிதத்தில் கூட்டு!.....(எசேக்கியல்காளியப்பன்)

இந்த வெண்பாவின் இறுதிச் சீரான 'கூட்டு'- காசு என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது; கூட்டு என்பதிலுள்ள -டு குற்றியலுகரம்;-ட்-மெய்யெழுத்து; அவை அலகு பெறா, என்பதனால் -கூ என்பது நேரசையாகக் கொள்ளப்படுகிறது;

வணக்கம் மகனே! வளர்தமிழில் வாயால்
சுணக்கமின்றிச் சொல்லிப் பழகு; (எ.கா)

இந்தக் குறள் வெண்பாவின் இறுதிச் சீர் -பழகு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் அமைந்துள்ளது.;
பழகு-என்பதில் உள்ள கு- குற்றியலுகரமாக அலகு பெறாது. அதனால், பழ- என்று நின்று நிரை என்னும் ஓரசைச் சொல்லாகக் கொள்ளப்படுகிறது.

உலக எழுத்துக்கள் உன்மடியில் பூத்து
நிலமே உறவாக நிற்க – கலகமிலா
பூமிக்குக் காரணியாப் புண்ணியத் தோன்றலாய்த்
தாமிருப்பாய் தாத்தாவைப் போல்.......(எ.கா)

இந்த வெண்பாவின் இறுதிச் சீரான போல்- எபதிலுள்ள மெய்யெழுத்தான ல்-அலகு பெறாத காரணத்தால், போ-என்று நின்று ஓரசைச் சொல்லாக னாள்- என்ற வாய்பாடு பெறுகிறது;

பூவுன் உறவு; புதுத்தமிழோ உன்,நினைவு;
நீவு விரல்களோ நேர்கலப்பை!- மேவும்
இலக்கியம் நின்வயலின் இன்பம் உனக்கும்
பலருக்கும் கூடும் பயன்!

இந்த வெண்பாவின் இறுதிச் சீரான பயன்-என்பதில் ன்-என்ற மெய்யெழுத்து அலகு பெறாமல், பய-என்று நின்று நிரை என்னும் ஓரசைச் சீராக மலர்-என்னும் வாய்பாடு பெறுகிறது;

============
**

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (12-Mar-14, 6:17 am)
பார்வை : 462

மேலே