நில மகளே நீயெம்மை மன்னிப்பாயா
நில மகளே நீயெம்மை மன்னிப்பாயா?
உன்னுள்ளே ஓடுகின்ற ரத்தம் தன்னை
உறிஞ்சிவிட்டு அதன்பிறகும் உன்றன் மீது
விண்ணின்று வீழ்கின்ற நீரைத் தேக்க
விரிந்திருந்த ஏரிகுளம் எல்லாம் தூர்த்து
மண்ணின்று வானூரும் மழையை ஈர்த்துன்
மடிசேர்க்கும் மாவனத்தைக் கொன்று தீர்த்தோம்!
மலைமகளே நீதானே படைத்தாய் எம்மை!
மரங்களையும் நீதானே படைத்தாய் இங்கே!விலையில்லாச் செல்வமெல்லாம் நீதான் தந்தாய்!
வெவ்வேறு உயிரனைத்தும் நீதான் தந்தாய்!
அலைபாயும் அறிவாலே எல்லாம் அழித்தோம்!
அனைத்துலகும் எங்கட்கே என்னும் திமிரில்
நிலையான நல்லுணர்வைத் தொலைத்து விட்டோம்;
நிலமகளே நீயெம்மை மன்னிப்பாயா?
---------------சித்திரைச் சந்திரன்.