தலையில்லா முண்டங்கள்..!
சோரும் போது ''சொறிந்து'' கொடுத்தால்
சோகம் எமக்கு காலாகும்!
பாலைக் கறந்து படுத்துக் கிடந்தால்
பாலும் கூட பாழாகும்!
துணிவை உனக்குள் வளர்த்துப்பாரு
துயரம் யாவும் தூளாகும்!
''இரந்து வாழும் வாழ்வைக் காட்டிலும்
இறந்து போவது மேலாகும்''
உணர்ச்சியற்று கிடக்கும் நெஞ்சை
உசுப்பும் கவிதை வாளாகும்
வீரம்மறந்து வீழ்ந்து கிடந்தால்
விடியல் தோன்ற நாளாகும்
''பயந்து வாயை பொத்தியிருந்தால்
பழைய சோறும் கிடைக்காது!''
துணிந்து எதிர்த்து கேட்கும் நெஞ்சை
தோட்டாக் கூட துளைக்காது!
நாய்கள் போடும் கூச்சல் கேட்டால்
நாளை உனக்கு விடியாது!
உறுதிநெஞ்சில் இருந்தால் உந்தன்
உயர்வை தடுக்க முடியாது.!