ரங்கநாதன் கவிதைகள் - நித்திரை பூக்கள்

கண்ணே நீ கண்ணுறங்கு - என்
கண்மணியே நீ உறங்க
சங்கு பால் உறங்கு
சாமமின்னு ஊரடங்க
நீ சிணுங்கி மூக்குறிய
உன் சின்னவிழி நீராட
என்ன குறைச்சலின்னு
என் சாமி நீயழுதே
அப்ப உங்கப்பன் சிறுவயசு
ஊசி மல்லி பூ மனசு
அவன் தொட்டு விளையாட
ஒரு வட்ட நிலா கேட்டு அழுவான்
சீண்டி விளையாட
ஒரு சிங்கக்குட்டி கேட்டு அழுவன்
சிட்டு ரெண்டு கூட்டுக்குள்ளே
சிரிச்சி மகிழிந்தாட
சேர்ந்து விளையாட
சிணுங்கி அடம் பிடிப்பான்
பாக்கு மரத்தோப்பு
பச்சைக்கிளி மாநாடு - அது
என்ன மொழி பேசுதுன்னு
என்னை அவன் கேட்டு அழுவான்
கங்கை கரை புரளும்
கழனியெல்லாம் மீனாடும்
சந்தை முத்து உருளும்
சந்தனத் தேரோடும்
சலங்கை இசைபாடும்
சங்கீதம் காத்தாடும்
ஓயாமல் தாலாட்டி - நான்
உறங்காம உறங்கி வைப்பேன்
இப்ப நமக்கு நேரம் பகையாச்சி
நித்திரைப் பூ சருகாச்சி - நமக்கு
காலம் பகையாச்சி
காகிதப் பூ துணையாச்சி - இப்ப
தள்ளா வயதெனக்கு - நீ
தானாக் கண்ணுறங்கு
என் தங்கக் கிளி கண்ணுறங்கு

எழுதியவர் : கவிஞர். நரியனுர் ரங்கு (14-Mar-14, 7:50 pm)
சேர்த்தது : ரங்கநாதன்
பார்வை : 57

மேலே