கண்டுகொண்டேன் என் இறைவா

இறைவா..
ஒரு மொழி எனக்குத் தந்தாயே
உன்னோடு நான் பேசிக் களிக்க
உலகோடு நான் பேசிப் பழக..
அதன்
அளவில்லா
அன்பினை எனக்கு
அமுத கிண்ணம் ஒன்றினில்
ஊற்றிக் கொடுத்தாயே
தெவிட்டாத சுவையினில்
திளைத்து வளர்ந்திட..!!
பொருளில்லா
இவ்வுலகில்
அருள் ஒன்று தந்தாயே..
அறம் தன்னை
போதிக்கும்
பெரு உருவை சுருக்கி
அளவாக
எனக்கு ஒரு
திருமொழியில் தந்தாயே..!!
தாயென்னும்
தந்தையென்னும்
உறவுகளின்
உதிரச் சூட்டினில்
உயிர் பூவாய்
என்னை நீ பூக்க வைத்தாயே
உலகத்து வாசலின்
கதவுகளை
வழியெங்கும்
கரைகளாய்
இட்டு வைத்தாயே
என் வாழ்க்கையின்
பாதையினை வடிவமைக்க
அவர் இருவருக்கும்
அன்பென்னும் ஆயுதத்தால்
ஆணையிட்டாயே..!!
கனவுகள் பல தந்து
காதலென்னும்
வழித்துணையை
அனுப்பிவைத்தாயே
இரு நதிகள் ஒன்றிணைந்து
உடையாத
பெரு நதியாய்
எங்களை நீ ஓடவைத்தாயே..!!
உறவுகளின்
மழைதனிலே
உளம் குளிரவைத்தாயே
தியாகத்தின் திறவுகளில்
மனம் நனைய வைத்தாயே..!!
புதியதொரு கோணம்
புதிய பார்வை
புத்திர பாக்கியத்தில்
எமக்களித்தாயே..!!
உயிரோட்ட வெள்ளத்தின்
ஒருதுளியில்
உலகத்து நியதியை
மழலை மொழிகொண்டு
அழகாய்தான் நீ எனக்கு
உணர்திவிட்டாயே..!!
இத்தனையும்
நீ செய்தாய்..
அத்தனையும் நீ தந்தாய்
எத்தனை
முகங்களில்
நீ எனக்கு காட்சி தந்தாய்..
இறைவா..
ஓர் உரு உனக்கில்லை
உலகெல்லாம் உன் உருவே..!!
கண்டுகொண்டேன்
என் கண்களால் நான்..!!