கரிசல் மண்ணில் ஒரு காவியம்19

கரிசல் மண்ணில் ஒரு காவியம்19

அத்தியாயம் 19

வெற்றி நடை பொட்டு நேர் கொண்ட பார்வையுடன் மனதில் எதிர்காலக் கடமைகளைச்சுமந்தவளாய்ப் பாடசாலைக்குச்செல்கிறாள் கமலா.ஊரின் கண்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான பார்வையில் அவளை விசாரிக்கின்றன,
“என்ன கமலா இன்றுமுதல் உனக்கு விடுதலையா?”என வினவும் புது மலர்ச்சி காணத்தேடும் புதுமை நாடும் கண்கள் சில.
“மீண்டும் கல்வி கற்கச்செல்கிறாயா?”எனக் கேட்டு வரவேற்கும் அறியாமை இருள் நீங்காதா! என ஏங்கும் விழிகள் சில.
“காலம் மாறிவிட்டதா?”என வியந்து விரியும் பார்வைகள் சில.
“பாரதி கண்ட புதுமைப்பெண் இவள்தானா?”எனப் போற்றிமகிழும் புதிய சிந்தனைக்குக் காத்திருக்கும் கண்கள் சில.
“ம்ம்ம்ம் பொட்டக்கோழி கூவி பொழுது விடிவா போகிறது?”என மயங்கும் பத்தாம் பசலித்தனமான பாவ விழிகள் பல.
இப்படிப் பலப்பல விதமான பார்வைகளைக் கடந்து அவள் பள்ளிக்கூடம் நோக்கிய தன் பயணத்தைத் தொடர்கிறாள்.
கமலா இன்று பள்ளிக்கு மீண்டும் வருகிறாள் என்பதை அறிந்த அவளுடைய தோழமைகள் அவளை வரவேற்க பள்ளி வாசலில் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
“அதோ வருகிறாள் கமலா இதோ வந்துவிட்டாள் கமலா.மாதர்குல மாணிக்கம் வருகிறாள்,எதிர்கால இளைய தலைமுறையின் விடிவெள்ளி வருகிறாள்.நாகரிக வாழ்வின் நம்பிக்கை நட்சத்திரம் வருகிறாள். அடிமைத்தளை அறுத்த அற்புதப் பெண்ணவள் வருகிறாள்.பாரதியை சுமந்து வருகிறாள்.பகலவன் பெரியாரை ஏந்தி வருகிறாள்.சுயமரியாதை சொன்ன அதிசய மனிதர்களின் கனவுகளின் நிசமாய் வருகிறாள்”என வாசலில் கூடி நின்ற மாணவக் கண்மணிகள் சுதந்திரக் காற்றை சுவாசித்தவர்களாய் உற்சாக ஒலி எழுப்பிக்கொண்டு ஆரவாரத்தோடு கமலாவை புத்துணர்வோடு வரவேற்று வகுப்பறைக்குள் அழைத்துச்செல்கிறார்கள் ஆர்வம் கொண்ட சக நண்பர்கள்.
அத்தனை அன்பு வரவேற்பையும் வெற்றிக்களிப்போடு ஏற்றுக்கொண்ட கமலா.முதலில் தலைமை ஆசிரியரைச்சந்திக்கச்செல்கிறாள்.அதிகமாக ஆரவாரம் காட்டிக்கொள்ளாமல் அடக்கி வாசிக்கும் ராசா அவளுக்கு முன்பாகவே அவன் தலைமை ஆசிரியர் அறையில் இங்குதான் வருவாள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறான்.அவன் பள்ளியின் முதல் மாணவன் என்பதால் அவனுக்குத் தலைமை ஆசிரியரிடமும் ஏனைய ஆசிரியர்களிடமும் அவனுக்கு நல்ல வரவேற்பு உண்டு.ஆகவே ராசாவின் முயற்சிக்கு ஆசிரியப்பெருமக்கள் உறுதுணையாக இருந்தார்கள்.இந்த வெற்றியில் ராசாவுக்கும் முக்கியப்பங்கு உண்டு என்பதால் அவனையும் ஆசிரிய மற்றும் மாணவ சமுதாயங்கள் மனம் உவந்து பாராட்டிக்கொண்டிருந்தன,
கமலா வருவதைக்கண்ட ராசா ஆனந்தக் களிப்பில் தன் மெல்லிய புன்னகையால் வரவேற்கிறான்.அவள் தன் நன்றியை கைகளைக் கூப்பி கண்கள் நிறப்பி ஆராதிக்கிறாள்.
“வாழ்க நீ “என தன் பூரிக்கும் விழிகள் பொங்க வாழ்த்துகிறான்.கமலா தலைமை ஆசிரியரின் அறைக்குள் கைகள் கூப்பி வணங்கிய வண்ணம் சென்று அவருடைய பாதங்களில் பணிந்து ஆசிர்வாதம் பெறுகிறாள்.கமலாவை தன் இருகரங்களால் தூக்கி நிறுத்தி விழிகளை துடைத்துவிட்டு ஒரு மகளிடம் ஒரு தந்தை காட்டும் பாசமாகப் பரிமாறிக்கொள்கிறார்.
“நல்லது.நீ எதை நினைத்தாயோ அதில் உறுதியாக நின்று சாதித்துவிட்டாய்.உன் சாதனை இன்றைய பெண்குலத்திற்கு ஒரு தூண்டலாக இருக்கட்டும்.இனி எதிர்காலப் பெண்ணினம் விழித்துக்கொள்ளும்.நீ ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தாலும் எதிர் கால உலகில் உனக்கும் உரிய கடமைகள் உண்டு என்பதை நீ உணர்ந்து கொண்டதால்தான் உன்னை நீயே தட்டி எழுப்பிக்கொண்டாய்.உனக்குள் எழுந்த அந்த உணர்வுத் தூண்டல்களுக்கு எழுத்துக்களைத் தந்து வாழும் மகான்களை நீ மனதில் எண்ணிக்கொள்.அவர்கள் உனக்கு ஒளியாக ஒளிர்ந்து உனக்கு வழி காட்டுவார்கள்.பெரியவர்கள் கண்ட கனவிற்கு இன்று நீ விடையாகி விளங்குகின்றாய்.உன்னுடைய எழுச்சியும் துணிவும் எதிர் காலத்திற்கு ஒரு சவாலாக விளங்கட்டும்.இப்போது எனக்குள்ளும் ஒரு நம்பிக்கை பிறந்துவிட்டது.இனி பெண்மை பழமைக்குள் மயங்கிக் கிடந்து மங்கிவிடாது.மீண்டும ஆண்டாள்கள், ஔவைகள்,சரோஜினிகள்,நாச்சியார்கள்,லட்சுமிபாய்கள்,மங்கையர்கரசிகள் போன்ற அதிசயப் பெண்குலம் தோன்றி இவ்வையம் சம உரிமையுடன் வாழ வழி காட்டும்.நீயும் இந்த நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் ஒரு அங்கம் வகிக்க வேண்டும் என நான் என் மனதார வாழ்த்துகிறேன்.வாழ்க!என வாழ்த்தி,”
“ராசா!கமலாவை வகுப்பறைக்கு கூட்டிட்டுப்போ” என கட்டளையிட ராசா கமலாவை வகுப்பறை வழிகாட்டி அழைத்துச்செல்கிறான்.
(தொடரும்)
கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (22-Mar-14, 9:19 am)
பார்வை : 235

மேலே