சொர்க்கம் எங்கே தொடர் அத்தியாயம் 1 2

சொர்க்கம் எங்கே .. தொடர்

அத்தியாயம் 1 & 2

1.

என்றும் போல் அன்றும் படுக்கையில் அமர்ந்து மடிக்கணினியை எடுத்து வைத்து முகநூல் உள்ளே புகுந்து நண்பர்கள் பலரும் என்னென்ன போஸ்ட் செய்திருக்கிறார்கள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது ..

யாரோ இருவர் அருகில் வந்து நிற்பது போல் தோன்றியது. வீட்டில் நான் மட்டும் தான் இருந்தேன். என் மனைவியும் அவள் அம்மாவும் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு வழிபடச் சென்றிருந்தார்கள்.

அந்த ஆலயம் சிறியது தான் என்றாலும் பல கடவுளை பிரதிஷ்டை செய்திருந்தார்கள். ஸ்ரீ ராமன்-சீதா-இலக்குமணன் சமேதம் அனுமான் இவர்களுக்கு ஒரு சிறிய கோயிலும், மற்றும் குருவாயூரப்பன், ஐயப்பன், மஹாலக்ஷ்மி, ஆறுமுகன் சுப்ரமண்யன், நவகிரகங்கள் இவர்களுடன், பிரதான பீடத்தில் சித்தி விநாயகனும் உள்ளனர். அந்த கோயிலுக்குச் சென்றுவந்தால் பல தெய்வங்களின் அருள் ஒருங்கே கிடைக்கும்.

வீட்டின் வாயிற்கதவு உள்ளிருந்து தாழிடப்பட்டிருந்தது. எனவே நான் அறியாமல் எவரும் வீட்டின் உள்ளே புகுந்து விட முடியாது. இருப்பினும் இருவர் உள்ளே இருப்பது போல் ஏன் தோன்றியது.

“ச்சே .. ச்சே” இது வெறும் பிரம்மையாக இருக்கும். அஞ்சாதே மனமே என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது, மதிப்பிற்குரிய மணி சார் அவர்களின் ஆத்மா பற்றிய போஸ்ட் ஒன்று கண்ணில் தெரிந்தது. மணி சாரின் போஸ்ட்கள் எல்லாமே செயலற்று இருக்கும் மனிதர்களின் சிந்தனையைத் தூண்டி எழுப்பி நம்மை வேறு உலகத்திற்கு கொண்டுசெல்லும் சக்தியுடையவையாக இருக்கும்.

2.

மனதில் திடீரென ஒருவித பீதி உண்டாயிற்று. நொடிப்பொழுதில் தேகம் முழுவதும் வியர்த்து விட்டது. உடல் முழுதும் ஒருவித நோவு. இதற்கு
முன் அப்படி ஒரு நோவு உணர்ந்ததே இல்லை. கை-கால்களில் ஒருவித நடுக்கம். என் நாவும் முற்றிலும் உலர்ந்து விட்டது போலும். உதடுகள் இரண்டும் பருவ மழை பொய்த்த காலங்களில் காணும் வயல்வெளிகள் போல் வறண்டு போயிருந்தன.

தலையை வலதுபுறமாகத் திருப்பிப் பார்த்தபொழுது வட்டவடிவமான உணவருந்தும் மேஜை மீது ஒரு பாட்டிலில் தண்ணீர் இருப்பது தெரிந்தது. அங்கு சென்று அதிலிருந்து சற்று நீர் குடிக்கவேண்டும் போல் தோன்றியது. எழுந்திருக்க முயன்றேன். முடியவில்லை ..

என்ன ஆயிற்று எனக்கு .. திடீரென்று ? மெள்ள மெள்ள கண்களிள் இருள் தோன்றத்தொடங்கி விட்டது. அமர்ந்திருந்த நான் அப்படியே கட்டிலில் வீழ்ந்தேன்.

பிறகு ... ?

எங்கும் இருள் சூழ்ந்திருக்கக் கண்டேன். உடலின் ஒவ்வொரு உறுப்பும் உணர்சிகள் இழந்தன. ஒருவேளை மரணம் என் முன் வந்து நின்று விட்டதோ ? வா .. வா .. என்று அழைக்கிறதோ ?

அந்நேரம் ..

கண்களுக்குப் புலப்பட்டனர் இருவர். யாரிவர்கள் ? முன்பின் பார்த்ததாகத் தெரியவில்லையே ! அவர்கள் இருவரும் என்னருகில் நின்று கொண்டு, கொடுத்துவிடு .. கொடுத்துவிடு என்று கேட்டனர்.

எதைக் கேட்கிறீர்கள் ?

உன்னிடம் இருப்பதை !

என்னிடம் என்ன இருக்கிறது ?

உன் உயிர் !

உயிரா ? எதற்கு ? யார் நீங்கள் ?

இன்னும் புரியவில்லை ?

இல்லை. நான் உங்களை இதற்குமுன் பார்த்ததாகவே நினைவில்லை.

இருக்காது. இருக்கவும் கூடாது. பூமியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் ஓர்நாள் எங்களைக் காண்பார்கள். ஆனால் அதைப் பிறரிடம் சொல்லும் வாய்ப்பு அவர்களுகுக் கிடையாது.

யார் நீங்கள் ?

ஹ ஹ ஹ .. நாங்கள் யமதூதர்கள்.

யமதூதர்களா ..

இடமறியாமல் இங்கு வந்து விட்டீர்களா ?

இல்லை. அறிந்தே தாம் வந்திருக்கிறோம்.

வாயிற்கதவு உள்ளிருந்து தாழிடப்பட்டிருக்கிறது. எப்படி நுழைந்தீர்கள்.

எங்கும் எதிலும் எப்படி வேண்டுமானாலும் நாங்கள் நுழைந்து வந்துவிடுவோம். விண்ணிலும் மண்ணிலும் நீரிலும் நெருப்பிலும் காற்றிலும் கூடக் கலந்திருக்கின்றோம்.

என் நேரம் வந்துவிட்டது என்று சொல்கிறீர்கள் .. அப்படித்தானே.

ஆம் .. அப்படித்தான்.

உயிர் பறிக்கும் உத்தமர்களே ! சற்று கருணை காட்டக்கூடாதா .. என் மனைவியும் மாமியாரும் கடவுளை தரிசிக்கச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வரும் வரை பொறுத்துக் கொள்ளுங்களேன். போகும் முன் என்மனைவியின் முகத்தை ஒருமுறை காணவேண்டும் போலிருக்கிறது.

ஆசையைப் பாரு மடையனுக்கு என்று சொல்லி இருவரும் சிரித்தனர்.

சரி .. போகட்டும். வாயிற்கதவு உள்ளிருந்து தாழிடப்பட்டிருக்கிறது. உங்களில் ஒருவர் அதை திறந்து வைத்தால் அவர்கள் இருவரும் வீட்டின் உள்ளே வர இயலும். இல்லையென்றால் சதா சர்வ காலமும் என்னை திட்டித் தீர்த்து விடுவார்கள். இந்த உதவியையாவது நீங்கள் செய்வீர்களா மாட்டீர்களா .. ? சொல்லுங்கள்.!

எத்தனையோ உயிர்களை எடுத்துச் சென்றிருக்கிறோம். இப்படி ஒருவன் கேட்டதே இல்லை. இது தான் உன் கடைசி விருப்பமா ?

அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். என் தொண்டை எல்லாம் வறண்டு விட்டது. கொஞ்சம் தண்ணீர் தந்தால் பரவாயில்லை. கண் தானம் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். இறந்த பின்னும் என்கண்களால் இப்பூவுலகைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்திடச் செய்திடின் நன்றியுள்ளவனாக இருப்பேன். இது சத்தியம்.

தாழிட்ட கதவை திறக்க வேண்டுமா ? அல்லது தண்ணீர் வேண்டுமா ? இரண்டில் ஒன்றே சாத்தியம். எது வேண்டும் என்று நிர்ணயித்துச் சொல். கண்ணிழந்த பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல் உள்ளது. காலம் கடந்து விட்டது. எனவே, கண்தானம் செய்வது சாத்தியக்கூரில்லை.

போய்யா .. போயி தாழிட்ட கதவைத் திறந்து வைய்யும்.

இருவரில் ஒருவன் என்னருகில் இருக்க, மற்றொருவன் சென்று கதவை திறக்கவும் ஆலயத்திற்கு சென்றிருந்த இருவரும் உள்ளே நுழைந்தனர்.

கட்டில் மீது படுத்திருந்த என் நெற்றியில் பிள்ளையார் கோவில் திருநீறும் குங்குமமும் சார்த்த உயிர் பறித்தார்கள் யமகிங்கரர்கள்.

அப்பொழுது .. கண்முன் இருந்த இருள் விலகி ஒளிமயமாகத் தெரிந்தது
எங்கும்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் முருங்கை மரத்தில் ஏறி வேதாளத்தை கீழே இறக்கி தன் தோளில் சுமந்தபடியே சென்றதுபோல், பறித்த உயிரை யமகிங்கரர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் தோள் மீது சுமந்து கொண்டு சென்றனர்.

- வளரும் -

எழுதியவர் : (22-Mar-14, 10:52 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 125

மேலே