அரசியல் பைத்தியம்

அளவுக்கு மீறி அங்கும் இங்கும்
அசைந்து விடாமலிருக்கவே
கால்களுக்கு கொலுசுகளாய்
இரும்புச் சங்கிலி -
சிலருக்கு கைகளில்
வளையலும் அதுவே
சிரித்துக் கொண்டு சிலர்
அழுது கொண்டு சிலர்
அடக்கமாய் சிலர்
ஆர்ப்பரித்து சிலர்
உளறிக் கொண்டு சிலர்
ஊமையாய் சிலர்!
பார்வையாளராய்
வந்து செல்லும் பலர்
இட்டு செல்ல தோதுவாய்
தட்டு ஒன்று அங்கே
அலுமினியச் சான்றாய்!
பைத்தியங்களின் தனிச் சொத்தாய்!
புண்ணியம் வேண்டி
சுயநலம் பெற
பிறந்த நாளன்று சிலர்
கூட்டிக் கொண்டு சென்று
குற்றாலக் குளிப்பாட்டி
பாவக் குறை போக்க
பயபக்தியோடு-
அன்று மட்டும்
பைத்தியங்கள்
பெருநாள் கொண்டாடும்
பிதாமகன்கள்
மறுமுறை
வரும்வரை
மீண்டுமாய் தொடர்ந்திடும்
அவலங்கள் அந்தோ!
அத்தனையும் நடக்குதுங்க
உலகத்தின் மேடையிலே
பைத்தியமாய் மக்களே
கிடக்கின்றனர் இங்கே
வாழ்க்கையெனும்
நிர்பந்தச் சங்கிலியால்
கட்டுண்டு -
பார்வையிட்டுச் செல்லும்
அரசியல்வாதிகள்
குற்றாலக் குளிப்பாட்டுகிறார்
இலவச மழையிலே!
தேர்தல் பிறந்த நாள்
அன்று மட்டும் மக்கள்
தெய்வப் பிறவிகள்!
மறுமுறை தேர்தல்
வரும்வரை
மீண்டுமாய் தொடர்ந்திடும்
அவலங்கள் அந்தோ!
ஆச்சரியம் அதுமட்டும்
மக்களும் அரசியல்வாதியும்
அவனை இவனும்
இவனை அவனும்
எண்ணுகின்றார் ஒன்றுபோலே
பைத்தியம் இவனென்று!
நானும் ஓர் பைத்தியம்தான்
மக்களிலே!
இதுவெல்லாம் நான் உளறும்
வார்த்தைகளே!