+என்ன கண்டோம் நாம் என்ன கண்டோம்+

பாடுபட் டுழைச்சு என்ன கண்டோம் - நம்ம
உழைப்ப பலரும் தின்ன கண்டோம்
பாசத்த காட்டி என்ன கண்டோம் - நம்ம
மோசமா யாக்கும் பூமி கண்டோம்
வியர்வையை உடுத்தி என்ன கண்டோம் - நம்ம
ரத்தத்தை உருஞ்சும் வீணர் கண்டோம்
பூமிய செதுக்கி என்ன கண்டோம் - நம்ம
வானம்போல் அரசும் பொய்க்க கண்டோம்
என்ன கண்டோம் நாம் என்ன கண்டோம்
சோகமும் ஏழ்மையும் சூழக் கண்டோம்
என்ன கண்டோம் நாம் என்ன கண்டோம்
சொந்தமும் பாதியில் விட் டோடக்கண்டோம்
ஓட்டுத்தான் போட்டு என்ன கண்டோம் - நம்ம
ஓட் டாண்டியாக்கும் தலைவன் கண்டோம்
ஒப்பாரி வச்சும் என்ன கண்டோம் - நம்ம
துச்சமாய் மதிக்கும் துஷ்டர் கண்டோம்
பழயதை தின்னு என்ன கண்டோம் - பண
முதலைகள் விழுங்கிய ஏப்பம் கண்டோம்
பழக்க வழக்கங்கள் போற்றி என்ன கண்டோம் - நம்ம
இளப்பமா பாக்கும் கூட்டம் கண்டோம்
என்ன கண்டோம் நாம் என்ன கண்டோம்
எங்கெங்கு காணினும் கஷ்டம் கண்டோம்
என்ன கண்டோம் நாம் என்ன கண்டோம்
உழைப்பாளி நஷ்டத்தில் துடிக்க கண்டோம்