பழைய நிலவு

ஜன்னல் நிலவே
அவளின் சினேகிதி!

இன்பத்திலும் துன்பத்திலும்
நிலவுக்கும் பங்குண்டு !

சிலசமயம் அவளின்
சோகப்பார்வையை காணப்பிடிக்காமல்
மேகப்போர்வைக்குள்
முகம் மூடிக்கொள்ளும் நிலவு!

தம்பியிடம் சண்டை - பள்ளித்
தோழியிடம் சண்டை எதுவானாலும்
நிலவிடமே முறையிடுவாள்!

தினந்தோறும் தேயும் நிலவைக் கண்டு
அவள் உள்ளம் நோகும்!

வாழ்வே இருளாய்த் தோன்றும் அவளுக்கு
அமாவாசையன்று !

இயற்கையின் சுழற்சியை
நிறுத்திவிடத் தோன்றும் அவளுக்கு
பௌர்ணமியன்று!

அன்னையின் மடிபோல்
அந்த ஜன்னலோரமும்
அவளுக்கு சொர்கமானது!

உறக்கம் மறந்து
நிலவை ரசித்த நாட்கள் ஏராளம் !

இப்படியே வாழ்க்கை
இனிக்கும் என்றிருந்தாள்!

சந்தர்ப்பங்கள் சம்பிரதாயங்கள்
கூடிவந்தது !
திருமணம் எனும் சம்பந்தம்
தேடி வந்தது!

தாலாட்டையும்
தாய் வீட்டையும் மறந்து
புகுந்த வீடு புகுந்தவளுக்கு
புது வீட்டில் புது நிலவோடு
நட்பு கொள்ள மனமில்லை !

பழைய வீட்டின் ஜன்னல் நிலவு
பகல் கனவாய் போனது !

புகுந்த வீட்டின் புது உறவில்
பழக்க வழக்கம் மாறி
பொறுப்புகளும் கூடி
மறந்தே போனாள் அந்த பழைய சினேகிதியை ,

என்றாவது ஒருநாள் நினைவுக்கு வரும்
அந்த பழைய நினைவு..,
பழைய நிலவு!!

எழுதியவர் : பாரதி செந்தில்குமார் (27-Mar-14, 4:45 pm)
Tanglish : pazhaiya nilavu
பார்வை : 136

மேலே