கள்ளிசெடிகள்

கட்டிய மனைவியை பிரிந்து
கடல் தாண்டிப் பறந்து
பாலைவன தேசத்திலே
வேலை தேடி வந்தவன் நான்!

இளஞ்சூடான காற்றலைகள் - என்
இதயத்தை வருடுகின்ற பொழுதுகளில்
பரந்து விரிந்த மணற்பரப்புகள்
பிரிந்து வந்த மனங்களை நினைவு படுத்துதே!

பாசமிகு தாயின் அரவணைப்பும்
நேசமிகு தந்தையின் அறிவுரையும்
காசுக்காய் தொலைத்துவிட்டு
கடல் தாண்டி வந்துவிட்டேன் தொலைதூரம்!

நித்தம் நித்தம் என் நெஞ்சில்
என் பிள்ளை முகம் சிரிக்கிறது!
முத்தமிட்டுக் கொஞ்சிடவே
என் வெள்ளை மனம் தவிக்கிறது!

காடு விற்று கடுக்கன் விற்று
நாடு விட்டு ஓடிவந்தேன் ! - எனவே
பாசமுள்ள பந்தங்களை - எண்ணியவுடன்
பார்த்துவர இயலவில்லை என்ன செய்வேன்!

வேலை சுமை வாட்டுகையில்
எண்ணம் துயர் கூட்டுகையில்
என் விழியிரண்டில் கண்ணீர்த்துளிகள்
என் உள்ளமெங்கும் கள்ளிசெடிகள்!

நான் திரும்பும் காலம் எதிர்பார்த்து
என்னை விரும்பும் உள்ளங்கள் காத்திருக்கும் !
அதை என்னும் பொழுதுகளில் மட்டுமே
என் இதயத்தில் ரோஜா பூத்திருக்கும்!!

எழுதியவர் : பாரதி senthilkumar (27-Mar-14, 5:36 pm)
Tanglish : kallisetikal
பார்வை : 96

மேலே