நானும் குழந்தைதான்

மகனே நீ என்
விலையில்லா சொத்து
உயிருக்குள் உயிர் உருக்கி
பக்குவமாய் செய்த பதுமை
கடவுளின் முழு உருவம் நீயடா

வைரங்களும் , வைடூரியங்களும்
உன் சிரிப்பொலி கேட்டதாலே மின்னுகின்றன
இல்லையேல் வெறும் கற்கள்தானடா

நீ பிறந்த நொடிதனில்
என் வாழ்வின் உயரம் அறிந்தேன்
உன் மழலை சத்தத்தில்
என் சுற்றம் மறந்து பேதையானேன்
உன் அசைவுகள் கண்டு
என் கருவிழிகள் இரண்டும் உறைந்தே போனது
உனைப் பார்க்கும் ஆவலில்
நான் என்பதையே மறந்துபோனேன்

புன்னகை எனும் பூ- விதழ் விரித்து
எனைச் சிலிர்க்கச் செய்கின்றாய்
உள்ளங்கைதனில் நீ உறங்கையில்
என் பசி மறக்க செய்கின்றாய்
நீ அழுகையில் மட்டும் ஏனோ
எனக்குள் வெடிவைத்து சிதைக்கின்றாய்

மொத்தத்தில் உனக்குள் எனை சிறைவைத்தாய்
உன் உருவில் என உயிர் மறைத்தாய்
நீ சுவாசித்து என் சுவாசம் பரித்தாய்

உனக்குள் எனைத் தேடித் தேடி
யுகங்கள் நொடிகளாய் நகர்கின்றன
"நான் " எனும் கொடும்பாவி எரித்து
மனித உரு கொடுத்தாய்

என்றோ மறந்துபோன
நூற்றாண்டுச் சுவடிகளிலும் கிடைக்கப்பெறா
என் தந்தையின் அறிவுரைகளும்
தாயின் கண்ணீர் திவலைகளில் ஒளிந்துகிடந்த
பாச அரவணைப்புகளையும்- என்
இதயம் எனும் கல்வெட்டில் - உன்
சிறு விரல்கள் கொண்டு நீ பொறித்தாய்

நானும் குழந்தைதான் - என்
தாயின் மடியில் தலை சாயும் நேரம்
மீண்டும் அவள் ( என் தாய் ) கருவறையில்
எனை வரைந்திடுவாயா
கடவுளெனும் ஓவியனே உன் பாதம் பணிகிறேன் .

எழுதியவர் : கோ.தினகரன் (29-Mar-14, 1:37 pm)
சேர்த்தது : brinchal
பார்வை : 216

மேலே