விண்மீன்கள் -2

விண்மீன்கள்
கருணை முத்துக்கள்
கனிந்த அன்பின் முத்தங்கள்
தரைக்கு வராத பறவைகள்
வட்டமிடும் புறாக்கள்
ஏக்கம் மண்டும் கவிதைகள்
எட்டாக் கனவுகள்

பகல் இரவென்று பாராமல் நான்
நித்தம் தவம் செய்திருக்கையில்
இறைவன் இரவில் மட்டும் எனக்களித்த
வரங்கள்

காதலனைப் பார்த்து கண் சிமிட்டி
களுக்கென சிரித்து
பேசாத பேச்சில்
நூறாயிரம் கவிதை சொல்லும்
காரிகைகள்

தலைவனுக்காய் இரவுமுழுதும்
கண் விழித்துக் காத்திருக்கும்
தலைவிகள்
இரவின் இருளைக் குறைக்க
இறைவன் ஏற்றிய
எழிற் தீபங்கள்

வானவாசலில் தேவன் இட்ட
வண்ணக் கோலப் புள்ளிகள்
பாதியில் வேலை முடித்து
பறந்து விட்டான் போலும் பகலுக்காய்.

எழுதியவர் : நேத்ரா (1-Apr-14, 7:15 am)
சேர்த்தது : Nethra
பார்வை : 167

மேலே