சொர்க்கம் எங்கே தொடர் அத்தியாயம் 12

சொர்க்கம் எங்கே ? தொடர்
அத்தியாயம் 12

12.

பூலோகத்திற்கு கீழ் அமைந்துள்ள உலகங்களையும் அங்கு வாழும் உயிர்கள் பற்றியும் தெரிந்து கொண்டாயா ?

ஆம் .. தெரிந்து கொண்டேன்.

மேலும் கேள்.

பூலோகம் .என்பது .. மாநிடப்பிறவிகளும் விலங்குகளும் மற்றும் தாவரங்கள் வசிக்கும் இடம். பிரபஞ்சத்தின் ஆயிரத்தில் ஒரு பங்கு தான் பூலோகம் என்று விஷ்ணு புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாம். பிரபஞ்சத்தின் விட்டம் 5.12 லக்ஷம் கிலோமீட்டர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறதாம்.

இங்கு வாழும் மனிதர்கள் அவரவர் செய்யும் கர்மங்கள் .. அதாவது தொழில்களுக்குத் தகுந்தவாறு பாவ புண்ணியங்களை சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

தவறுகள் செய்யாத மனிதர்களே பூமியில் இல்லை. தவறு செய்பவர்கள் அனைரும் சட்டப்படி தண்டிக்கப் படுவதும் இல்லை.

குற்றவாளிகள் பலரும் சட்டத்திலுள்ள குறைபாடுகளை சாதகமாக பயன்படுத்தி தண்டனைகளிலிருந்து சுலபமாக தப்பிவிடுகிறார்கள்.

சிபிச்சக்ரவர்த்தி போலவோ, ராஜா அரிச்சந்திரன் போலவோ, பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் வாழ்வதில்லை.

உலகோர்க்கு உண்மையை உரைத்த ஏசுநாதரை சிலுவையில் அறைந்து துன்புறுத்தியவர்களும் மனிதர்களே.

வேதங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதை என்று சிலரும், வேதங்கள் மற்றும் புராணங்கள் உண்மை என்று நம்பிவரும் பக்தர்களை கடவுளின் பெயரால் ஏமாற்றி பாலியல் தொடர்பு கொள்ளும் சந்நியாசிகளும், கோயிலில் இறைவனை வணங்கவரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை அபகரித்து சொத்துக்கள் குவித்துக் கொள்ளும் தர்மகர்த்தாக்களும், மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் அரசியல்வாதிகளும், வரிப்பணமே செலுத்தாமல் அரசாங்கத்தை ஏய்க்கும் பெரும் தொழிலதிபர்களும், தானியங்களில் கலப்படம் செய்து விற்று உயிர் வாழும் மனிதர்களும், வரதட்சினை கேட்டு தொல்லைகள் கொடுத்து இளம்பெண்களை தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு தள்ளிவிடும் குடும்பஸ்தர்களும், உழுகின்ற காலமெல்லாம் ஊர் சுற்றிவிட்டு அறுவடை காலத்தில் அருவாள் கொண்டு சென்று, காய்ந்திருக்கும் களத்துமேடு கண்டு கண்ணீர் சிந்தி,கடவுளைக் குற்றப்படுத்துபவர்களும் போல பலரும் இருக்கிறார்கள்.

தவறுகள் செய்துவிட்டு தான் செய்தது சரியே என்று அடம் பிடிக்கும் கூட்டம் வேறு.

பெற்று வளர்த்து கல்வி புகட்டிய பெற்றோர்களை அனாதைகள் போல் நடுத்தெருவிலோ அல்லது முதியோர் இல்லங்களிலோ விட்டுவிடும் மனிதர்கள் வேறு.

காசு பணத்திற்கு அடிமைகளாகி வழிப்பறி, கொள்ளை, கொலை முதலிய் பாவ செயல்களை செய்தும், இனவெறி, மொழிவெறி, மதவெறி பிடித்து மக்களை ஒன்று சேர விடாமல் தடுத்து, பொதுமக்கள் வழிபடும் திருத்தலங்களை இடித்து தரைமட்டம் ஆக்கி அதன் காரணமாக மக்களிடையே வெறுப்புணர்சிகளைத் தூண்டிவிட்டு ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள வைக்கும் ஈனர்களும் உள்ள வையகத்தில் குற்றங்களுக்கு அளவே இல்லை.

தேர்தல்கள் வந்துவிட்டால் ஓட்டுரிமை பெற்றுள்ள ஒவ்வொரு குடிமகனின் பொன்னான வாக்குச் சீட்டுகளை ஐநூறு ரூபா பணமும், குவார்டர் பாட்டில் மதுவும், கூடவே கோழி பிரியாணியும் கொடுத்து ஓட்டுப்பிச்சை கேட்கும் அரசியல்வாதிகளின் அனுதாபிகளும், அதற்கு விலைபோகும் லட்சோப லட்ச பொதுமக்களும் செய்வதெல்லாம் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமின்றி, ஒரு சமூகக் குற்றமும் ஆகும்.

இவர்போன்றவர்கள் அடுத்த பிறவியிலாவாது திருந்தி வாழவேண்டுமென்றால் தண்டனைகள் பெற்றுத் தானே ஆகவேண்டும்.

இவ்வாறு பலவிதத்திலும் குற்றம் செய்யும் மக்களை தண்டிப்பதெற்கென்றே ஸ்ரிஷ்டிக்கப்பட்டன வெவ்வேறு உலகங்கள்.

அதுபோல நற்செயல்கள் செய்து, இறைவனின் திருநாமம் சொல்லி அனைத்து புகழும் அவருக்கே என்று அர்பணித்து புண்ணியம் சம்பாதித்துகொள்ளும் மனிதர்களுக்காக ஸ்ரிஷ்ட்டிக்கப்பட்ட உலகங்கள் தான் பூமிக்குமேல் உள்ளன.

- வளரும் -

எழுதியவர் : (1-Apr-14, 12:59 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 116

மேலே