ஐந்தாட்சிபோபியா

தூசிப்படுகைகள் துடைத்து
துகில் களையத்
தொடங்கியிருக்கிறது
ஒரு தேர்....!!

சிரசாசனங்களுக்குப்
பழகியிருந்த ஒலிபெருக்கிகள்
உறங்க நேரமின்றி
உறுமியதிர்கின்றன.... வாக்கு
வியாபாரக்
கடைமேடைகளில் .....!!!

பஞ்ச பன்னிரெண்டு
காலங்களாய்
அழுக்கேறிக்கிடந்த
பொங்கல் பானைகள்
கழுவுதல்களுக்குத்
தயாராகின்றன.. பொய்ப்புளியில்
ஊறிக்கொண்டே....!!!

கும்பிடுவீழ்
குத்தகைதாரர்களுக்கே
இங்கு
தீபாராதனை நாற்காலிகளும்..
அர்ச்சனைப் பிரசாத
தொகுதியிடங்களும்.....!!!

தொண்டு மாலைகள்
கழன்று மறைந்து
வேலைப்பாம்புகளாய்
நெளிந்து கிடக்கிறது
தெய்வங்களின் கழுத்துகளில்....!!!

வறுமைச் செறிவுகளெல்லாம்
கண்கள் இடுக்கியமர்ந்து
வான்நோக்கி காத்திருக்க...
வரியேற்றச் செறிவுகளெல்லாம்
வானூர்திகளில் கால்பரப்பி...!!!

இதனைச் செய்தேனென்று
சொல்வதற்கில்லா
அவர்களும்.....
அதனைத் தடுத்தாரென
குறைகள் நிரப்பியே
இவர்களும்......
ஊர்வலங்களாய் நகர்கிறார்கள்
வெற்றுக்காவடிகள்
தூக்கித் திரிந்து....!!!

பகலிரவுச் சலுகையாய்
இருட்டுச் சுரங்க
வழியேனும்
கசிந்து வாசல் நிறைக்கிறது
காந்தியுருக் காகிதங்கள்... !!!

காண்டாவிளக்குப்
பட்டாணிகளும்... பரணியேறிய
வறுசுண்டலும்...தீர்ந்து....
உலோகச் சக்கரங்கள்
சுருக்குப்பை நிறைத்ததே
கொண்டாட்டங்களின்
நல்நிறைவு...!!!

மீண்டும்
தயாராகிக் கொண்டிருக்கிறது
தேசியவனம்...
குத்திய மறுநொடி
கோவணங்கள்
திணிக்கக் காத்திருக்கும்
ஊனத் திருவிழாக்களுக்காக.....!!

எழுதியவர் : சரவணா (1-Apr-14, 1:04 pm)
பார்வை : 109

மேலே