மனத்துரு -- படைப்பு கவிஞர் அருள்மதி சி
மனத்துரு --- படைப்பு கவிஞர் அருள்மதி . சி
தூர்வாற மறந்துவிட்ட
குளம் குட்டை நிரப்பி
குடியிருப்பு கட்டிவிட்டு
மறந்துவிட்ட விசயம்
சட்டென்று நினைவுவர
மொட்டைமாடியில் கட்டினோம்
நீச்சல் குளம் !
நாற்பது வருடமாய்
வளர்ந்து விட்ட மரம் வெட்டி
நான்கே மாதத்தில் மாடி வீடு கட்டினோம்
மரத்தை வெட்டிய பாவத்திற்கு பரிகாரமாய்
பால்கனியில் புல் வளர்த்தோம் !
முதியோர் இல்லம் அனுப்பிவிட்ட
செல்லமாய் எமை வளர்த்த
பெற்றோரை ஈடுகட்ட
முப்பதாயிரம் கொடுத்து
வளர்க்க வாங்கி வந்தோம் செல்லப்பிராணி !
வாய்ப்புகையில் வாகனப்புகையில்
வாயு மண்டலத்தை விடமாக்கி
வசதியாய் பொருத்திக்கொண்டோம்
கட்டிலறையில் ஒரு காற்றுப்பதனாக்கி !
சின்னத்திரைக்கு அதிக நேரம் ஒதுக்கி
அழுதுவிட்டு
சிக்கனமாய் சிரித்துக்கொண்டோம்
சிந்திக்கவும் மறந்துபோனோம் !
வாழ்க்கை வண்ணத்திரையில்
கருப்பு வர்ணம் பூசிக்கொண்டோம் !
வாஸ்து செய்ய வாரி இரைத்துவிட்டு
கடவுளுக்கும் கழிவறைக்கும்
பொதுச்சுவர் வைத்துக்கொண்டோம் !
ஆயிரம் சதுரடிக்குள் அங்கம் சுருக்கியதால்
ஆரோக்கியம் காத்திட
எட்டு மாத தவணைக்கு வாங்கிப்போட்ட எந்திரம்
துருப்பிடிக்கத் தொடங்கியது ? எந்திரம் மட்டுமா ?
என் மனதும்தான் !
மனத்துரு அகக்கண்ணில்
உறுத்தும் வலியை எப்படி வர்ணிப்பேன் ?
வருங்காலத் தலைமுறையே !
உன் இரும்பு மனதிலாவது துரு பிடிக்காமல் இருக்கட்டும் !