தீர்வு

தீர்வு

இதுதான் எழுதப்பட்டதோவென்று
இதையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
அயர்த்தலினால்
தொட்டும் அணையைவொட்டாத உருக்களை
இல்லாமற்செய்விக்கும் திரைக்கதைமனசு
விற்பனைக்கில்லை என்கிறார்கள்

கிழக்குலரா சிறுநீட்சியில்
எட்டிப்பிடிக்க மலைக்குன்றும்
விட்டுக்கொடுக்கா செங்கதிர்க்கோல்களும்
தள்ளிநின்று சிரித்த ஆற்றங்கரைக்கு
சிவந்த சந்தோஷத்தையே கூட்டியிருந்தது

கற்றுத்தெளியாதப் பக்குவங்களுடன்
காற்றும் பூக்களும்
காதலுடன் மோதியப்படி
அமைந்து கிடந்த நுண்ணுணர்வால்
சினைப்புக்கலந்த சில்மிஷத்துடன்
சிறு வண்டொன்று சீறித்தோற்கிறது

இத்தனையுங் கடந்து
வெட்கந் துறந்த
அந்த ஜன்னல் கம்பிகளுக்குள்ளே
திரும்பி நின்றவாறே
இறுகப்பிடித்த
அவ்வெள்ளைத்திரையை
நிறங்களினால் நனைத்தப்படி
விசும்பிக் கொண்டேயிருக்கின்றது
அடிமைத்தனங்களுடன்கூடி
நிரம்பிய நிர்வாணமொன்று

செப்பற்கரிய அக்காட்சிதனை
குடைந்துநின்ற
அவ்விழிகளின் ஆயுளை
என்றோவொருநாள்
நான்கு மரச்சட்டங்களும் ஒரு மண்வெட்டியும்
தீர்மானிக்கத்தான் போகிறது
இத்திரைக்கதையின் முடிவில்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (13-Apr-14, 12:19 pm)
பார்வை : 78

மேலே