புகைக் கட்டை

விரல் இடுக்குகளிடை
உடனுக்குடன்
என்னோடு
உடன் கட்டை
ஏறி
எரியும்
நீள்
உருளை
உருவ
பசப்புப்
பாசக்
கட்டை இது


உறிஞ்ச உறிஞ்ச
எரிந்து முடியும்
உறிஞ்சுபவன்
உயிர் உறிஞ்சும்
விலை எடுத்து
வினை விதைக்கும்
விநோதக் கட்டை இது


புகைக்கும்
புகை கக்கும்
புகை விழுங்கி
புகைக்கு
புகலிடம் கொடுக்கும்
இருதயத்தை
புகையில்
புதைக்கும்
நன்றி கெட்ட
இனக் கட்டை இது



வயதுக்கு
வரு முன்
தனைத்
தத்து கொடுத்து
எனைத்
தந்தையாக்கிய
விந்தையான
உறவுக்
கட்டை இது


எனக்காக
தன்னை
எரித்துக் கொள்வதாய்
ஊருக்கு
காட்டி
அகத்தே என்
அகம் எரித்து
என் சிந்தையில்
மந்தை ஓட்டும்
மாயக் கட்டை
இது


எத்தனை முறை
எட்டி உதைக்க
நினைத்தாலும்
நிமிடங்களில்
என்
மனம் மாற்றி
அதன் வழியில்
என்னை
ஏய்த்து
ஓட்டிச் செல்லும்
வித்தை தெரிந்த
சித்துக் கட்டை
இது


வரி வருமானத்தில்
அரசாங்கம்
வயிறு வளர்க்க
என்
வயிற்றில் அடிக்கும்
என் விரலிடை
காட்டில் முளைக்கும்
என்
காட்டு
சொந்தக் கட்டை இது



வசதி படைத்தவர் முதல்
வயிறு பசித்தவர் வரை
வயது வராதவர் முதல்
வயது முதிர்ந்தவர் வரை
வாய் உள்ள
அனைவரும்
வாசிக்கும்
துளையில்லா
புல்லாங்குழல்
இசைக் கட்டை
இது


உயிர் இழை
இளைக்க வைத்து
உருக்குலைத்து
உயிருக்கே உலை
வைக்கும்
புகையிலையில் ஊறிய
புகைக் குட்டை
இது


சில அங்குல
உடலால்
பல அங்குல
உடலை
சில வருட
நேரத்தில்
சிறிது சிறிதாய்
சிதைத்து
சருகாக்கி
ஆயுள்
சுருக்கும்
சீர்க் கெட்ட
சுள்ளிக் கட்டை
இது

எழுதியவர் : கீதமன் (14-Apr-14, 7:28 pm)
பார்வை : 67

மேலே