காதல் மறுமொழி சொல்ல தவிக்கிறேன்-வித்யா
உன் பார்வை அம்புகள்
பட்டு பட்டே புண்ணாகின
என் சன்னல் விழிகள்.......!
என் எலும்பு மஜ்ஜைக்குள்
உற்பத்தியாகும் சிவப்பணுக்கள்
எண்ணி எண்ணியே
கணிதம் கற்றுக்கொண்டாய்
நீயடா.......!
எப்படி ஆரம்பிப்பது
என்று கொஞ்சம் நான்
நெருங்கி செல்ல......
வார்த்தைகள் வலுபெறாமல்
தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள
எச்சில் விழுங்கி
இதழ் திறக்க முயன்றேன்......!
நீயோ....
தாகமா என்றாய்.....
அப்போது இதழ்களும்
வலுவிழந்து விட...
ஆமென்பதுபோல் தலையசைத்தேன்......!
நீ கொடுத்து
நான் குடித்த நீரில்
மீன் பிடித்துக் கொண்டிருந்தது
என்னிதயம்......!
இருநாள் விடுமுறை
கடந்து மூன்றாம்நாளின்
இரண்டாவது நேர்காணல்
மரத்தடியில்......
இலைகளை எல்லாம் சற்றுநேரம்
வேலை நிறுத்தம் செய்ய சொல்லிக்கொண்டிருந்தது
உள்ளார்ந்த என் குரல்........!
நீ தலைசாய்த்து
எனை பார்த்தபோது
நிழல்வேண்டி நிஜத்திடம்
ஒதுங்கியவளாய்
உணர்வற்றிருந்துவிட்டேன்......!
இப்படியே
தானாய் வந்த சந்தர்பங்களும்
நானாக உருவாக்கிக்கொண்ட சூழ்நிலைகளும்
வெட்கத்திலும் உளறலிலுமே
வீணாய் போயின.....!
உன்னிடம் என் காதல்
மறுமொழிசொல்ல
தவித்த தருணங்கலெல்லாம்
சர்க்கரை கொஞ்சம் தூக்கலாக போட்டு
நிலவுக்கு நான்கொடுத்த தேநீரென
கதகதப்பாகவே இருந்தது........!
பட்டினி கிடந்த
என் பட்டாம்பூச்சிகனவுகள்
மதிய உணவுகொள்கின்றன
உன் தேன் சிந்தும் நினைவுகளோடு......
என் படுக்கை இதழ்களிலோடும்
எலிகளின் தொடர்வண்டி
விளையாட்டில்நானும்
என் காதலும்.......!
ம்ம்......உன் காதலுக்கு
பதில்சொல்லும்போதுதான்
தெரிகிறது........
காதல் சொல்ல
நீ பட்ட பாடு........!