உன் நினைவுகளோடு என் பயணம்
அன்று .......
முதல் சந்திப்பில்
மெளனப்புன்னகையில்
என் வாலிபத்திமிரை
மெளனிக்கவைத்தாய்.
கண் உருட்டி
கை நீட்டி
நாக்கு மடக்கி
ஏதோ ஏதோ
என்னிடம் பேசி
என்னையே என்னிடமிருந்து
தொலைக்க வைத்தாய்.
விரும்புகிறேன் என்று
நீயும் நானும்
இறுதிவரை சொன்னதில்லை.
ஆனாலும்
நாமிருவரும் விரும்பிக்கொண்டோம்
நமக்கான காதல் உணர்வை...!
இன்று...............
அன்பே....!
கவிதையின் வழியாக
பிரிவு வலிகளை வரியில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
தடதடவென சத்தமிடும் ரயில்
கலகலவென உன் சிரிப்பை
நினைவு படுத்துகிறது.
எனக்குள்ளிருக்கும் நீ
மின்னும் தாரகையில்
ஒளிரும் பகலவனில்
காணும் காட்சிகள்
எங்கிலும் நீயாகவே...!.
யாருக்கு தெரியும்?
இறுதியாய் நீ விட்ட
கடைசி மூச்சு கூட..
என் உயிர் மூச்சில்
கலக்கப்பட்டிருக்கும் என்று.!
நீ இல்லா
இந்த உலகில்....
என் உணர்வுகள்
பிரிவு என்று தனிமை
தீவு ஒன்றில் கடத்தப்பட்டிருக்கிறது.
அன்பே..! காதலே...!
நீ இன்றி நானிருக்கிறேன்.
நானின்றி உன் ஆன்மா
தவித்துதானடி இருக்கும்.?
உன் நினைவு கப்பலில்
சோக கடலில் பயணிக்கிறேன்.
சந்தோஷத்தின் முகமூடியில்
வேடமிட்ட சிரிப்பில்
வாழ்ந்துக்கொண்டே
செத்துக்கொண்டிருக்கிறேன்.
செத்துக்கொண்டே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.
--------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.
--------------------------------------------------------------------
தலைப்பு கொடுத்து படைப்பு எழுத வைத்த “ கவி பாரதி “ க்கு நன்றிகள்