நீ வேண்டாம் எனக்கு

நீ வேண்டாம் எனக்கு !

வடுவாய்க் குத்திக் கொன்ற - எனை
வெகுவாய் தாக்கிச் சென்ற - அதில்
வருவாய் ஈட்டிச் சென்ற
நீ வேண்டாம் எனக்கு !

என் ஏற்றத்தில் மார்தட்டி
தடுமாற்றத்தில் கை காட்டி
மாயமாய் மறைந்தவளே - உன்
சாயம் வெளுத்ததடி
நீ வேண்டாம் எனக்கு !

சாதனையின் முன் உள்ள
சோதனையும் - பல
சோதனையின் பின் வரும்
சாதனையும் அறியாத .....
ரோதனையே , வேதனையே
நீ வேண்டாம் எனக்கு !

உன் மனப் பர்ச்சில் சொர்க்கம் வாங்க
என் மனிப் பர்சில் ரொக்கம் இல்லை
கணிதம் பார்க்கும் உன்னிடத்தில்,
மனிதம் வாழும் தடமில்லை
நீ வேண்டாம் எனக்கு !

என்னைக் கண்டு சிலிர்த்ததாய்
சொன்ன உன் நெஞ்சம் ,
நான் சிறைப்பட்டதால் தானோ
சிராய்ப்புற்றது ?
உமிழ்ந்து விட்டாய் ..
நெகிழ்ந்தது நெஞ்சம்
நீ வேண்டாம் எனக்கு !

என் கஷ்டமெல்லாம்
உன் நஷ்டமாய் கணக்கெழுதி
இஷ்டம் போல் களைந்துவிட்டாய்
இலாபம் பார்ப்பவளே ..
கோபமில்லை உன் மேல் .
நீ வேண்டாம் எனக்கு !

பணியைப் பார்க்கிறாய்
நீ என் பிணியைத் தீர்க்காமல்
அணுஅணுவாய் உன்னை
இரசித்ததற்கு , கனுக்கலெல்லாம்
காயம் தந்து சென்றுவிட்டாய்
நீ வேண்டாம் எனக்கு !

எவனோ சித்தரித்தான் - என்
சிறகுகள் கத்தரித்தான்
அயராமல் எத்தனிப்பேன் - ஓர் நாள்
என் மன வானில் விஸ்தரிப்பேன்
புறம் காட்டி போனவளே - உன்
புகலிடம் போய் சேர்வாய்
நீ வேண்டாம் எனக்கு !

வீழ்ச்சி என்பது
முற்றுக்கட்டை இல்லை - அது
தினம் நிகழ நான் ..
அதிஷ்ட கட்டையும் இல்லை .
இப்படியே நான்
இருந்துவிடப் போவதுமில்லை
இறந்துவிடப் போவதுமில்லை
சுழலட்டும் வாழ்க்கைச் சக்கரம்
விதி இருந்தால் .. உன் மதி முகம்
காண்பேன் மீண்டும் ,...

நீ வேண்டாம் எனக்கு !

- நிஷான் சுந்தரராஜா -

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (26-Apr-14, 1:22 am)
பார்வை : 1402

மேலே