தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக் கவிதை சூரியனை கட்டியிழுப்போம் வா - கவிஞர்விவேக் பாரதி

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக் கவிதை
சூரியனை கட்டியிழுப்போம் வா - கவிஞர்.விவேக் பாரதி
------------------------
“மஞ்சள் நிற சூரியனே உனை
பிடிக்க ஆளில்லா காரணத்தால்
வஞ்சம் கொண்ட மனதோடு
வானத்தில் ஆடாதே ! யாம்நினைத்தால்
மஞ்சுலவு வானத்தில் கவிதை
வலையினை வீசி எறிந்து
துஞ்சும் உன்னைப் பிடித்து
இழுத்து இங்கே கொண்டுவந்து !பின்
நெஞ்சுயர்த்தி நின்று சொல்வோம்
நாங்களெலாம் தமிழர் என்று.!” -விவேக் பாரதி
-------------------------

வெண்ணிற சிறகும்,பொன்னிற பிடரியும் கொண்டவொரு புரவி.., புறப்பட்ட இடத்திலிருந்து உம்மை பூவைப் போல சுமந்து சென்று,நீங்கள் நினைக்கும் இடத்தில்,நினைத்த நேரத்தில் இறக்கிவிடுமென்று சொன்னால் நீங்கள் வேண்டாமென்றா சொல்லப் போகிறீர்கள்.?

புதிதாய் வாங்கிய பணப் பை -“மணி பர்ஸ்”- ஒன்றில் நீங்கள் போட்டு வைத்த ஆயிரம் ரூபாய் நோட்டொன்று… எடுக்கும்போதெல்லாம் இரட்டிப்பாய்க் கொண்டேயிருந்தால் நீங்கள் வேண்டாமென்றா சொல்வீர்கள்..?

யதார்த்தத்திற்கு ஒத்துவராத கற்பனைதான்.. ஆனால் எண்ணிக் கொள்ள சுகமாய் இருக்கிறதே..! இதில் கிடைக்கும் இன்பத்தை மனம் தொடர்ந்து நுகரத் துடிக்கிறதே..!

இதற்கு கொஞ்சமும் குறையாமல்தான் இருக்கிறது கவிஞர்களின் சில கற்பனைக் கவிதைகள்.! இதுபோன்ற கவிதைகள் ஏன் புனையப் படுகின்றன.?

சாமானிய மனிதனுக்கு எப்போதும் நிறைவேறாத ஆசைகள் என சில இருக்கும்.ஆனால்,‘அது நிறைவேறினால்..’ என்ற கனவும் அவனுக்குள் விழித்தே இருக்கும். அது அவனது அறிவின், மொழியின் விரிவைப் பொறுத்து வார்த்தைகளாக வெளிப்பட்டுக் கொண்டும் இருக்கும்.

சாமானிய மனிதனைவிட சற்றே மேம்பட்டவனாய் இருக்கும் கவிஞன் என்பவனின் கனவும், வெளிப்பாடும் இன்னும் சற்று கூடுதலாகவே இருப்பதென்பது வெளிப்படை. தனது கற்பனையை,கனவை அவனது மொழியில் கவர்ச்சிகரமாக அவன் வெளிப்படுத்துகின்ற நிகழ்வு படைப்பாக, கவிதையாக மாறுகிறது.

இந்த நிலையில்தான்,“கன்னியர்தம் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால்,மண்ணில் மாமலையும் ஓர் கடுகாம்..”

“ இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்,
இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்..
மேகம்போல வானவீதியில் நின்று மிதந்திடுவேன்..இடி
மின்னல் மழையானாலும் துணிஞ்சு இறங்கிடுவேன்..” - என்று காதல் குறித்தும்,

“கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்..” என்று வீரம் குறித்தும், மிகைப்படுத்தி பாடுவது,இந்த ஆசைகளின், கனவுகளின் வெளிப்பாடே..!

அப்படியொரு கனவுநிலைக் கவிதையாகவே, கவிஞர் விவேக் பாரதியின் “சூரியனைக் கட்டியிழுப்போம் வா..!” என்ற கவிதையும் தோற்றம் தருகிறது.

தமிழனால் எதுவும் முடியும்.?. என்பதை வலியுறுத்திச் சொல்லும் விதமாக,கவிதை வலையால்,சூரியனைக் கட்டி இழுத்து வந்துவிடுவோம்..என்று சொல்கிறார். வஞ்சம்,மஞ்சு,துஞ்சு,நெஞ்சு..என்ற வார்த்தைகளை இடம் பார்த்து சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

மேலோட்டமாகப் பார்க்கின்றபோது, இது கவிதை என்பதைக் கடந்து, கவிதையினூடாக வேறு ஏதேனும் கருத்தைச் சொல்ல வருகிறதா..? என்று தேடினால்,அந்தத் தேடலுக்கு எவ்வித இடமும் அளிக்கவில்லை.

“எழுதப்பட்ட வரிகளில் இருப்பதல்ல கவிதை.அதில் எழுதப்படாத சிந்தனையில் இருப்பதே கவிதை..”என்பது கவிஞர் தமிழன்பனின் கூற்று.

படைப்பாளிகள் எப்போதும் கவிதை,கவிதைக்காக என்ற அளவில் மட்டும் அல்லாது,அதனைக் கடந்து வாசிப்பவருக்கு ஏதேனும் ஒரு கருத்தை ஊட்டும் வகையில்,கவிதைகளின்,படைப்புகளின் திசைகளைத் தீர்மானித்துக் கொள்வது நன்று.!
உதாரணமாக..,இழப்பு எனும் தலைப்பில் ஒரு கவிதை.
-------------
இழப்பு..!
-----
காட்டாமணக்கு ஆடாதோடையுமாய்
அடர்ந்த வேலியில்,
கோவைப்பழம் பறித்து
கூண்டுக்கிளிக்கு ஊட்டி
ஓணான்கொடியில் ஊஞ்சலாடி
ஓடிஓடி ஊசித்தட்டான் பிடித்து
தீப்பெட்டியில் பொன்வண்டு அடைத்து
தீனி கொடுக்க கிளுவைஇலை பறித்து
வண்ணத்துப்பூச்சிகளின் பின்னே அலைந்து
தும்பைப்பூத் தேனை போட்டியாய்க் குடித்து
கூட்டாஞ்சோறு ஆக்கி
குருவி வெத்திலை போட்டு
வேப்பம்பழம் பொறுக்கி விற்று
ஜவ்வுமிட்டாயில் நாக்குச் சிவந்து
ஆற்றுமணலில் கூத்து ரசித்து
வாய்க்கால்மீன்களுடன் குளித்துத் திளைத்து
பாட்டியின் மடியில் பேய்க்கதை கேட்டு
பாதிராத்திரியில் படுக்கை நனைத்து
இன்னும் எவ்வளவோ இனியநினைவுகள்..
இழப்புத்தான் என் குழந்தைகளுக்கு
நகரத்தில்.
ஆனால்,
சாதி சொல்லித் திட்ட வாய்ப்பற்ற நகரத்தில்
சந்தோஷமாகவே இருக்கிறார்கள் பிள்ளைகள்
சகல சுதந்திரங்களோடும்..!

-கவிஞர் கோ.கலியமூர்த்தி-

--------------
அன்புடன்
பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (26-Apr-14, 12:56 pm)
பார்வை : 334

மேலே