சிறப்புக் கவிதை 11-கதவுகளற்ற சிறை - ரொஷான் ஏ ஜிப்ரி

கவிதையின் விழியோரம் நிர்க்கதியாய் ஒன்றை இழப்பதன் வலியைப் பூசிக்கொண்டிருக்கின்றது இயலாமை.. பல நாள் கனவாகவும் சிலருக்கு வாழ்நாள் சாதனையாகவும் கூட இருந்துவிடக்கூடியது கனவு இல்லம்..எத்தனையோ மனிதர்கள் இருக்க இடமின்றிக்கூட தெருவில் பாய்விரிக்கும் சமுதாயம் நமது...வசதிகளற்ற வாடகைவீட்டில் வசதியாய் தனது கால்களை நீட்டிக்கொள்கின்றது ஒரு வெற்றிடம்...அதை நிரப்புவதற்குள் பாதியும் மீதியுமான கதையாகிப் போகின்றது வாழ்க்கை...

கவிஞர் திரு.ரொஷான் ஏ ஜிப்ரி அவர்கள் கவிதையின் மடிப்புகளில் ஒரு சொந்த இல்லத்தினை எதிர்பாராத ஒரு காரணத்திற்காய் சூழ்நிலைக்காய், இழந்துவிடுதலின் பரிதவிப்பு பற்றி முனகிப் போகின்றார் வேதனையுடன் ...

இழப்பின் முகங்களும் நகங்களும் பலவாகத் திட்டமிடுதலில் காலத்தின் நோக்கம் அறியமுடிவதில்லை யாவரும்...இழப்பு இதனைச் சரிகட்டுவது எதுவாக இருக்கும் ? பலபோது பணம் மட்டுமே..ஒருவரின் இழப்பானது இன்னொருவரின் லாபமாகவோ , பலனாகவோ மாறிப்போவதில் புன்னகைக்கின்றது ஒரு அர்த்தம்..அது நடப்பின் நியதியாகவும் இருக்கலாம் ...சில நேரங்களில் இருப்புக்களை மீறிப் போகின்றது இந்த இழப்பு...என்றாலும் எதை மிச்சம் வைக்கவிடுகின்றது வாழ்வு?! நெடுநாள் கனவாக லட்சியமாக ஆசையாய் கட்டுகின்ற ஒரு வீடானது கேட்டுப் பழக்கப்பட்ட சொர்கத்திற்கு ஈடானது...அதை இழக்கும் போது அதே கேட்டுப் பழக்கப்பட்ட நரகத்தினை எங்கிருந்தோ கொண்டுவந்துவிடுகின்றது...

"ஒவ்வொரு கல்லையும் செதுக்கி 
வீட்டை கட்டியவன் 
தெருவுக்கு வெளியேறுகிறான் 
கதவுகளற்ற சிறையில் தள்ளப்பட்ட கைதியாய் !"

"கதவுகளற்ற சிறை " - ஒரு கற்பனையிலும் இப்படி எண்ணிப் பார்க்க முடிவதில்லை ..உவமானம் முறுக்கிக்கொண்டிருக்கும் நரம்புகளை தளர்த்திப் போகும் உள்ளக் கசிவுகளை உச்சி முகர்கின்றது....சற்றுநேரம் நினைவில் நின்றுவிட்டு மீண்டும் பூட்டிக்கொள்கின்றது சிறை சாவியற்றதாய்......

நமக்குச் சொந்தமான ஒரு வீட்டை வேறொருவர் சொந்தமாக்கிக் கொள்வதென்பது , உள்ளூரப் பாய்ந்தோடும் குருதியில் கற்களை விசிறியடித்துப் போவதான துயரம்..சொல்லி மாளாத துயரம் ....நினைக்க நினைக்க , அவ்வீடு இனி நமக்கு இல்லை வேறொருவரின் கைகளில் இனி திறக்கப்படும் , பூட்டப்படும் , புழங்கப்படும்
என்பதில் ,

"அவனது நிறம்,அவனது கூரை,
அவனது தரை என வீடு
அவனுக்குள்ளேயே அடங்கி விடுகிறது "

எவனொருவன் கைகளில் அவ்வீட்டின் சாவி சுயமரியாதை இழந்து அவனுக்கெனச் சாசனமிட்டுக் கொண்டதோ , அவனுக்கே இனி அவ்வீடு அனைத்துமாய் அவனாக்கப்பட்டதாய் அடங்கிவிடுகின்றதாகப் புழுங்குகின்றது வரிகள் ....

ஏறக்குறைய ஒரு சமாதியில் நிலவுகின்ற அமைதியை அவ்வீட்டின் சாவி சுமந்துகிடப்பதாகவே உணரமுடிகின்றது இன்னொருவரின் கைகளில் " கதவுகளற்ற சிறை " யில்......

எழுதியவர் : புலமி (26-Apr-14, 5:28 pm)
பார்வை : 110

சிறந்த கட்டுரைகள்

மேலே