தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை என் பையன் வரான்-கிருபாகணேஷ்

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை
என் பையன் வரான்-கிருபாகணேஷ்
--------

“பையன் வந்தான் சொந்த மண்ணிற்கு,தாய் சென்றாள் மண்ணிற்குள்..!” என்று முடிகின்ற,கவிஞர்.கிருபா கணேஷ் எழுதிய“என் பையன் வரான்” கவிதை வாசிக்கும்போது ஒரு அதிர்ச்சியைத் தந்துமுடிகிறது.அந்தச் சூழலை நினைத்தால் நமக்கும் கவலையாகத்தான் இருக்கிறது.

இக் கவிதையில்,வேலை நிமித்தமாக வெளிநாடு.?. சென்ற மகன்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்த மண்ணிற்கு திரும்புகிறான்.

மகனின் உடல்நிலை எவ்வாறிருக்கும்..? இளைத்திருப்பானோ, கருத்திருப்பானோ..என்பது போன்ற கவலையிலும்,மகனுக்கு பிடித்ததாய் என்னவெல்லாம் உண்பதற்காக செய்யவேண்டும் என்று,நினைத்தாலே இனிக்கின்ற ஒரு பட்டியலோடும் ஒரு தாய்க்கேயுரிய கவலையோடு,மகனுக்காக விமானநிலையத்தில் காத்திருக்கிறாள் தாய். இவையனைத்தும், அன்னை என்பவளின் நல்லியல்புகளை வெளிச்சமிடும் வரிகளாக கவிதையில் மிளிர்கிறது.

விமானத்திலிருந்து இறங்கிவரும் மகன், தன்னுடன் வந்த ஒரு பெண்ணைக் காட்டி,"இவள் என் மனைவி சாய்ரா" என்றும்,எங்களின் திருமணத்திற்கு உன்னை அழைக்க முடியவில்லை,மன்னித்து விடுங்கள் என்கிறான்.

அதிர்ச்சியில் மயங்கி விழும் தாய்,அப்போதே உயிரையும் விட்டுவிட..ஒரு சிறுகதைபோல சோகத்தையும்,அதிர்ச்சியையும் தந்து முடிகிறது கவிதை.

தாயின் உடனடி மரணத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்.?

திருமணத்திற்கு கூட,நம்மை அழைக்காமல் அசட்டை செய்துவிட்டானே மகன்..என்பதா.?

கணவனை இழந்தபின்,தான் மட்டுமே,மகனுக்கு ஆதரவாய் இருக்கிறோம் என்ற நினைப்பில் இருந்தபோது,அவனுக்கென ஒரு துணையை அவன் தேடிக் கொண்டதாலா.?

தன்னை இனிமேல் மகன் பொருட்படுத்தமாட்டான் என்ற அதிர்ச்சியா..? என்று பல கேள்விகள் நமக்குள் தொடர்ந்தாலும், “என் மனைவி சாய்ரா..”என்று மாற்று மதம் அல்லது சாதியைச் சேர்ந்த பெண் என்று குறிப்பால் உணர்த்தும் வகையில்,மகன் சொல்வதையடுத்து,அந்தத் தாயின் மரணம் சம்பவிப்பதை உணரும்போது,மாற்று மதம் அல்லது சாதி என்பதை நல்லியல்புகள் அனைத்தும் பெற்றிருக்கும் அந்த அன்னை ஏற்றுக் கொள்ளவில்லையோ..!,என்றுதான் ஐயப்பட வேண்டியதிருக்கிறது.

அதனைத்தான் கவிஞர் உணர்த்திச் செல்கிறார் என்றால்,அது குறித்து நாமும் கவலைப்பட வேண்டியதாக இருக்கிறது.அதே சமயத்தில் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது.? என்ற கேள்வியும் முளைப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

நாம் வாழும் சமூகத்தில்,வாழ்க்கை முறைமை களாக இருக்கும் நிறைய விஷயங்கள்,இயல்பு வாழ்க்கையை முரண்பாட்டிற்குள் தள்ளிக் கொண்டே போய்கொண்டிருக்கிறது.

மனிதர்கள் இணைந்து வாழ்வதற்காக என்று சொல்லப்பட்ட சாதி,மதங்கள்.., அந்த அடையாளங்களாலேயே,இப்போது மனிதர்களைப் பிரிக்கும் பிரதான காரணமாகப் போனது.

சாதியை,மதத்தை இணைக்கின்ற காரணிகளுள் ஒன்றாக,இரு மனித உயிர்கள் காதலர்களாக மாறுகின்றபோது அல்லது காதல் மணத் தம்பதிகளாக மாறும்போது..,அதனை ஏற்றுக் கொள்ள மனதில்லாத சாதியால்,மதத்தால் வெறியூட்டப்பட்டவர்கள்.., காதலர்களை, தம்பதிகளை கௌரவக் கொலை செய்வதும், கலவரத்தில் இறங்குவதும் சமீபத்திய உதாரணங்கள்.

இன்னும் சில காதலர்களோ,பெற்றோரோ தற்கொலையும் செய்கிறார்கள்.

கொலையோ,தற்கொலையோ..இதில் எந்த விதத்திலானாலும் உயிரிழப்பு என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.இனி இதுபோன்ற உயிரிழப்புகள் தேவையா..? தவிர்க்க முடியுமா..? என்பதையும் வருங்காலத் தலைமுறைகள்தான் ஆலோசிக்க வேண்டும்.!

உங்கள் பார்வைக்காக ஒரு கவிதை..!

இணக்கம்..!
--------
பிள்ளையைக் கிள்ளிவிட்டு
தொட்டிலை ஆட்டுவது போல்
கட்டும் மேம்பாலங்களிலும்
கடக்கும் சாலைகளிலும்
நடக்கும் பாதைகளிலும்
மதநல்லிணக்கம் என்றபெயரில்
பெயர்தாங்கி நிற்க்கின்றார்கள்
மறைந்த பல சமுதாய மனிதர்கள்

சாலைகளில் மதநல்லிணக்கத்தை
காண்பதை விட்டு
வாழ்க்கையில்
மதமற்ற மனிதர்களை
தேடுவோம்….

மனிதநேய உணர்வில்
மக்கள் வாழ்ந்தால்
ஆறுமுகத்தின் மகள்
அப்துல்லாஹ்வின்
மருமகள்
ஆல்பர்ட்டின் மகன்
ஆறுமுகத்திற்கு
மருமகன்…!
--------கிளியனூர் இஸ்மத்- துபாய்..
---------
அன்புடன்
பொள்ளாச்சி அபி.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (26-Apr-14, 11:16 pm)
பார்வை : 341

சிறந்த கட்டுரைகள்

மேலே