சிறப்புக்கவிதை 15 - மணக்கோலம் - தம்பு

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றொரு பழக்கப்பட்ட பழமொழி உண்டு. என்னைக் கேட்டால், திருமணங்கள்தான் சொர்க்கங்களை நிச்சயிக்கின்றன. ஒன்றா? இரண்டா?, திருமணங்கள் ஆயிரம் உறவுநதிகள் சங்கமிக்கும் இன்பக்கடல், லட்சம் பனிப்புன்னகைகளை பரப்பும் குளிர்சூரியன், கோடி நட்பு நிலவுகள் சிந்தும் ஏகாந்தப்பேரொளி. திருமண நிகழ்வு என்பது இரு கனவுச்சொர்க்கங்கள் இணைந்து எழுப்பும் ஒரு நினைவுக்கோவில்.

பொதுவாகவே திருமணங்களைப் பற்றிய எந்த ஒரு பதிவும் பெண்மையை முன்னிறுத்தியே பதியப்படுகின்றன. அதற்கு காரணமில்லாமலில்லை. ஒரு குடும்பத்தேரினை நிலைகுலைவின்றி, மேடு பள்ளத்தடைகளினினால் தடம்பிறழாமல் காக்கும் அச்சாணியாக இருப்பது பெண்மையே. அப்பெண்மையின் மீது தனது முழு நம்பிக்கையை வைத்து, தேரினது இலக்கை நோக்கி சீறிப்பாயவைக்கும் புரவிகளாக இருப்பது ஆண்மை. அந்த ஆண்மை கூறும் பெண்ணின் பெருமையாக, இக்கவிதை சிறக்கிறது.

“அவள் அணைப்பில்
அணைந்து போனது
ஆயிரம்
அவஸ்தைகள்…நினைவில்
நின்று கொண்டது
நிம்மதி”

ஆணென்பவனை முழுமைப்படுத்துவது பெண்மை என்பதை இவ்வரிகளின் மூலம் அழகாக நிலைநிறுத்துகிறார் கவிஞர் தம்பு. ஆண், அவஸ்தைகளின் நாட்டில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவன். அவனுடைய தேடல்களனைத்தும் பெண்மையின் அரவணைப்பெனும் வலி நிவாரணியை நோக்கியே திசைகொள்கிறது. அத்துணை எளிதல்ல, அத்தேடலின் வழித்தடங்கள். ஒரு பெண்மையின் உண்மையான உணர்ச்சிகளெனும் மரவிதைக்கு நீருற்றுபவனுக்கே, அதன் நிழல்சுகம் பாத்தியமாகிறது. அவளுக்குரிய உரிமைகளெனும் தென்றலுக்கு சாளரம் திறப்பவனுக்கே, அதன் அரவணைப்புகள் சாத்தியமாகிறது. இவ்விரு பிறவிக்கடன்களை தீர்ப்பவன் மனதில், அவஸ்தைகள் அணைந்து நிம்மதி ஒளியுறுகிறது.

“மாலையிட்ட
நிமிஷம்.. மறுஜென்மம்
இதுவென்று
மனம்
அமைதி கண்டது…!!

தாலி கட்டி
தாரம்
என்று ஆனதும்… மனப்
பாரம்
தூரம்
போனதே….!!”

தன் காதலுக்குரியவளிடம், தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக்கொள்ளும் மோட்சநிலையினை கூறும் வரிகளிவை. உறவறிய, உலகறிய நான் இவளுக்குரியவன் என்று மங்கல நாணேற்றி உறுதி கூறும் தருணத்தில், அவனுடைய பாரமிக்க பலவருடப் பொழுதுகள், நொடிகளின் இடைவெளியில் கரைந்து போகின்றன. அவனுடைய பாவங்களின் அந்திமக்காலத்து தீர்ப்பு நாளாக அத்தருணம் மாறி, அவன் மன்னிக்கப்படுகிறான். தன் மனையாளின் முதல் மகனாக மறுபிறப்பெடுத்து, மன அமைதி கொள்கிறான்.

"நெற்றி தொட்டு
குங்குமம்
வைத்தேன்.....மனசெங்கும்
பொங்கும்
மகிழ்ச்சிக்கு
அளவேது.....!!"

நீ எனது உயிராகிவிட்டாய், என் உடலெங்கும் உள்ளோடும் குருதியோடு கலந்துவிட்டாய். நம் குருதிவழி பிரிந்து பிறக்கும் வம்ச விருட்சத்தின் வேராகி விட்டாய். இந்தத் திலகம் அதன் அடையாளமாய், உன் நுதலில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என்று இரண்டறக் கலக்கும் மகிழ்ச்சிக்கு அளவீடுகள்தான் உண்டோ.

இந்த வரிகளோடு அந்த மணவறையில் சொர்க்கம் ஒன்று உருவாகிறது. அது, காண்பவர் கண்வழி இதயத்துள் புகுந்து, பூமாரி பொழிகிறது. பன்னீர்த்துளிகளின் வாசம் மங்கள இசையோடு கலந்து, மண்டபத்தை மட்டுமல்லாது, குழுமியிருக்கும் மனங்களனைத்தையும் நிறைக்கிறது.உலகத்தின் இன்பங்களனைத்தும் சரம் சரமாய் தன்னைத்தானே கோர்த்து, மணமக்களெனும் இரு புள்ளிகளை நிரந்தரமாய் பிணைத்து, அலங்கரிக்கும் ஒரு மணக்கோலக் கவிதையாய் உருக்கொள்கிறது.

ஒரு அழகான திருமணக்காட்சியை, இனிமையான எளிமையான வார்த்தைகள் பூட்டி, எதுகைகளால் அலங்கரித்து, உணர்ச்சிகள் ஊற்றெடுத்து பரவுகின்ற ஒரு பெருநதியில், நம்மை பிரயாணிக்க வைத்த வகையில், இக்கவிதை சிறப்புப் பெறுகிறது. வாழ்த்துக்கள் தம்பு அவர்களே!!.

கவிதை எண் : 190572

எழுதியவர் : ஈ.ரா. (27-Apr-14, 8:10 pm)
பார்வை : 152

சிறந்த கட்டுரைகள்

மேலே